போட்டி நிறைந்த இன்றைய சூழலில் கவலையில் மூழ்கிவிடாமல் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு ஜனாதிபதி முர்மு அறிவுரை

சென்னை: போட்டி நிறைந்த இன்றைய சூழலில், மாணவர்கள் கவலையில் மூழ்கிவிடாமல், திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும் என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார். இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி ஆகியோர் பங்கேற்றனர். கவர்னர் ரவி தலைமை தாங்கினார்.

விழாவில், ஜனாதிபதி முர்மு 105 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும் தர வரிசையில் முதலிடம் பெற்ற 108 மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். சென்னை பல்கலை கழகத்தில் மொத்தமாக 762 பேர் பட்டம் பெற்றனர். அதுமட்டுமல்லாமல் சென்னை பல்கலையுடன் இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 89,934 மாணவர்களும், தொலைதூரக்கல்வியில் 12,166 பேரும், பல்கலைக்கழக வளாகத்தில் பயின்ற 1,367 மாணவர்கள் உட்பட மொத்தம் 1,04,416 பேர் இந்தாண்டு பட்டம் பெற்றனர்.

சென்னை பல்கலைகக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்றவர்களுக்கும், இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ மாணவியரின் பெற்றோர், பாதுகாவலர், மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு மகிழ்ச்சியாக இருப்பது போல, இது அவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மற்றும் இன்றைய ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுத் திறன், கல்வித் திறன் ஆகியவற்றுடன் பணியாற்றுவதையும் அவர்களின் அர்ப்பணிப்புக்காகவும் நான் பாராட்டுகிறேன்.

பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம். படித்த பெண்கள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அதிக அளவில் தங்கள் பங்களிப்பையும், பல்வேறு துறைகளில் தலைமைத்துவம் பெறுவதுடன், மேலும் சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்தியாவின் 6 முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக இருந்து, இன்று நீங்கள் நடந்து செல்லும் இதே வளாகத்தில் நடந்து சென்றது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். இப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்தான். சர் சி.வி.ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர், நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தியாவின் இரண்டு தலைமை நீதிபதிகள், நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி மற்றும் நீதிபதி கே. சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையின் துறையை வளப்படுத்தியுள்ளனர். உங்கள் பல்கலைக்கழகம் அத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறந்து விளங்குவதற்கு உங்களை கடுமையாக பாடுபடத்தூண்டும்.

இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு மற்றும் துர்காபாய் தேஷ்முக். அவர்களும் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களே. அந்த இரண்டு பெரிய பெண்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் முன்னணியில் இருந்தனர். அவர்கள் பல தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தனர். இனி வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக இருப்பார்கள். சென்னைப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சிக் கான வழிமுறைகள் மற்றும் கல்விக்காக ஊக்குவித்துள்ளது. இது பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை இயக்கி வரும் திறன்மிக்க மனித வளங்களை மேம்படுத்த உதவுகிறது. அதிநவீன ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவும், இடைநிலை ஆய்வுகளை ஊக்குவிக்கவும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இந்த பல்கலைக்கழகம் மேலும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் மூலம் கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒரு நிறுவனமாக இந்தப் பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த முடியும். போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அழுத்தம், நல்ல கல்வி நிறுவனங்களில் சேரவில்லையே என்ற பயம், மதிப்புமிக்க வேலையில் சேரவில்லையே என்ற பதற்றம், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை போன்றவை நம் இளைஞர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கும், நமது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவதற்கும் நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

எந்தவொரு கவலையும் உங்களை மூழ்கடிக்க கூடாது. ஒரு தொடக்கம் மற்றும் வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும், சில நேரம் அதை நாம் கவனிக்க முடியாமல் போகலாம். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். பெற்றோர், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, மாணவர்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற சவால்களை கடந்து செல்ல அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். சவால்களை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் நமது இளைஞர்கள் அன்பாகவும், மதிப்புடனும், அதிகாரம் பெற்றவர்களாகவும் உணரும் அத்தகைய சூழலை உருவாக்க நாம் கூட்டாகப் பணியாற்ற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நீங்கள் தொடங்கும்போது, ​​உங்கள் இலக்குகளை மேம்பட்டதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், உங்கள் இலக்குகளால் அழுத்தத்துக்கு ஆளாகக் கூடாது. உறுதியோடும், அச்சமின்றியும் உங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். மகாகவி பாரதியின் சில அழியாத வரிகள் எப்போதும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன.

“மந்திரம் கற்போம், வினை தந்திரம் கற்போம்,
வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்,
சந்திர மண்டலம் இயல் கண்டு தெளிவோம்,
சந்தி, தெருப்பெருக்கும், சாத்திரம் கற்போம்”
என்ற வரிகளை மனதில் கொள்வோம்.

உங்கள் வாழ்விலும் தொழிலிலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உங்களால் முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எதிர்காலம் உன்னுடையது. இந்த செய்தியுடன், உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.

தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘மாணவர்களாகிய உங்களுக்கு, வாழ்க்கையில் வெற்றி மட்டுமே இருக்காது, ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கல் இருக்கும். அதில் இருந்து நீங்கள் கற்று கொண்டு மீண்டு எழ வேண்டும். நீங்கள் உயர்ந்தால் உங்கள் குடும்பம் உயரும். அதனால், மாநிலம் உயரும் அதனால் நாடு உயரும். உங்கள் இலக்கை பெரியதாக வையுங்கள். 2047ல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தில் இருப்பீர்கள், அப்போது நாட்டிற்காக என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை உங்களை நோக்கி நீங்கள் எழுப்புங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

* தமிழ்நாடு நாகரிகத்தின் தொட்டில்
ஜனாதிபதி முர்மு பேசுகையில், ‘‘தமிழ்நாடு, நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமை மரபுகள் இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ளது. திருக்குறளில் உயர்ந்த அறிவு பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. கவிதையின் பெரும் பக்தி சார்ந்த மரபு தமிழ்நாட்டில் தான் தொடங்கியது, அந்த மரபுகள், இடம் பெயர்ந்து சென்ற துறவிகளால் வடக்கே சென்றது. தமிழ்நாட்டின் கோயில் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனிதத் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது. இது போல் நம்மிடம் உள்ள அளப்பரிய, வளமான கலாச்சார பாரம்பரிய பெருமிதங்களுடன், இளம் மாணவர்கள் 21ம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவுச் சமூகத்தின் முக்கியமான குடிமக்களாக மாற வேண்டும்’’ என்றார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை