பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப இன்று 1,076 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு இன்று 1,076 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் இரவு நேர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு பேருந்துகளில் இந்த முறை அதிகளவில் பயணம் செய்தனர்.

அரசு சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்துகள் மட்டுமின்றி வழக்கமான ரயில், சிறப்பு ரயில்கள், ஆம்னி பேருந்துகளிலும் சுமார் 5 லட்சம் பேர் வெளியூர் சென்றனர். 4 நாட்களில் 12 லட்சம் பேர் வெளியூர் சென்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப போக்குவரத்துதுறை சார்பில் 16ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 11,289 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 3 நாட்களுக்கு 17,589 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர் நேற்றைய தினமே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டனர். நேற்று வழக்காக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சென்னைக்கு 1,726 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 2,632 பேருந்துகளும் இயக்கப்பட்டன. கடந்த 2 நாட்களில் சிறப்பு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூரு உள்பட பல நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,076 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,176 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மாலையில் இருந்து இரவு வரை சிறப்பு பஸ்கள் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றன. இதேபோல சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 1,663 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகள் சென்னை திரும்புவதற்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நாளை அதிகாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம், பெருங்களத்தூர், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலைய பகுதிகளில் நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் சில பேருந்துகள் அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் வந்து சேர்கின்றன. இரவு நேரங்களில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே குறைவான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் வசதிக்காக கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் கூடுதல் இரவு நேர பேருந்துகள் மற்றும் நாளை அதிகாலையில் கூடுதல் பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா