டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்: 1 இடத்துக்கு 340 பேர் வரை போட்டி முதல்நிலை தேர்வு செப்.14ம் தேதி நடக்கிறது

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஒரு பதவிக்கு 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது.

இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்களும், குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இத்தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்ட அன்றே இணையதளம் வாயிலாக இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயர் என்று போட்டு போட்டு விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பித்தல் பணி முடிந்தது. கடைசி நாளிலும் நிறைய பேர் விண்ணப்பித்தனர்.

இதுவரை குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு பதவிக்கு சராசரியாக 340 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை