டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 5 சிறை அலுவலர், 44 உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 5 சிறை அலுவலர் மற்றும் 44 உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2023-24ம் ஆண்டில் சிறைவாசிகளின் நலனுக்கான நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முறை மற்றும் உணவின் அளவு ரூ.26 கோடி கூடுதல் செலவில் சரிவிகித சத்துள்ள உணவாக மாற்றம் செய்து வழங்கப்பட்டு வருவதுடன், உணவு தயாரித்திட தேவையான கிரைண்டர், உலர் மாவரைக்கும் இயந்திரம், சிறைவாசிகளுக்கு உரிய நேரத்தில் உணவு விநியோகம் செய்திட இ-ஆட்டோ ஆகியன ரூ.1.23 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 600 சிசிடிவி கேமராக்கள் ரூ.11.50 கோடி செலவில் நிறுவிட உத்தரவிடப்பட்டு, சிறை பாதுகாப்பினை மேற்படுத்த நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான், ஊடுகதிர் அலகிடும் கருவி போன்ற நவீன உபகரணங்கள் ரூ.5.98 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளன.  சிறைவாசிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் பேச மாதம் 10 தொலைபேசி அழைப்புகள் செய்திடவும், சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை காவல்துறை அங்காடியில் விற்பனை செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட சிறை நூலகங்களை மேம்படுத்திட ரூ.2.09 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர் என்பவர் சிறையின் முதன்மை செயல் அலுவலர் ஆவார். இவரது முக்கியப் பணி சிறைவாசிகளிடையேயும், பணியாளர்களிடையேயும் ஒழுக்கத்தைப் பேணுவதாகும். உதவி சிறை அலுவலரின் முக்கியப்பணி மத்திய சிறைகளில் சிறைவாசிகளை அனுமதி எடுத்தல், ஆடை, உடமை போன்றவற்றை பராமரித்தல் ஆகும். கிளைச்சிறைகளை பொறுத்தவரை கண்காணிப்பாளராக செயல்படுவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறை அலுவலர் மற்றும் உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிறை அலுவலர்கள் 5 பேருக்கும், உதவி சிறை அலுவலர்கள் 4 பெண்கள் உள்பட 44 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர்களுக்கு வேலூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், துறை தலைவர் கனகராஜ் மற்றும் சிறைத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்