டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப நடவடிக்கை தேவை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். எனவே ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை