திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.17 கோடி திட்ட பணிகளுக்கு தீர்மானம்: அதிகாரிகள் வெளிநடப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்தில் ரூ.17 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டம், தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று நடந்தது. இதில், 1வது வார்டு கவுன்சிலர் சிவக்குமார் பேசுகையில், கடற்கரை சுங்கச்சாவடிக்கு அருகே மிகப்பெரிய தனியார் அபார்ட்மென்ட் கட்டப்படுகிறது. ஆனால் எனது வார்டில் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் என்ற காரணத்தை காட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பல பணிகள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளன. 1986, உட்பிரிவு, 6ன்படி, மீனவர்களுக்கு விதிகளை தளர்த்தலாம். ஆனால் அதிகாரிகள் அதை செய்வதில்லை என்றார்.

அதற்கு மண்டல உதவி ஆணையர் நவேந்திரன், திட்டப் பணிகளை செய்வதில் உள்ள நடைமுறைகளையும், சிக்கல்களையும் தெரிவித்தார். அப்போது, கவுன்சிலர் சிவக்குமாருக்கும், உதவி ஆணையருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உதவி ஆணையரும், அவரை தொடர்ந்து மற்ற மாநகராட்சி அதிகாரிகளும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். எனவே, கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு அதிகாரிகளை சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கூட்டத்திற்கு திரும்பினர்.

இதனையடுத்து 7வது வார்டு அதிமுக கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில், ராஜாஜி நகர், கார்கில் நகர் பகுதிகளை நீர்நிலை புறம்போக்கு என்ற காரணத்தைக் கூறி, அங்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்ட பணியும் செய்யவில்லை. தற்போது எனது கோரிக்கையை ஏற்று பள்ளி மற்றும் சமுதாயக்கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறேன். இதேபோல் சாலை மற்றும் தெருவிளக்கு பணியையும் செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு தி.மு.தனியரசு பதிலளிக்கையில், மக்கள் நலப் பணிகளில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். தொடர்ந்து, ரூ.17 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!