திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் பிச்சை எடுப்பதில் தகராறு ஒருவருக்கு சரமாரி வெட்டு: இருவருக்கு போலீஸ் வலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே, பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஒருவருக்கு சரமாரியாக வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயில் வாசலில் பலர் பிச்சை எடுக்கின்றனர். அதன்படி, பழனி மற்றும் ரவி ஆகிய இருவர் பிச்சை எடுத்து, அங்கேயே தங்கி வந்தனர். இந்தநிலையில், பிச்சை எடுப்பதில் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பழனியும், ரவியும் போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்த ரவியின் நண்பர்களான சரவணன், காத்தவராயன் ஆகியோர் நேற்று காலை அங்கு வ்நது, ‘‘ஏன் ரவியை அடித்தாய்,’’ என்று கேட்டு பழனியுடன் தகராறு செய்தனர்.

தகராறு முற்றிய நிலையில், இருவரும் தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பழனியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பழனிக்கு காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து, படுகாயமடைந்த பழனியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், காத்தவராயன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பழனியை வெட்டிய சரவணன், காத்தவராயன் ஆகிய இருவரும் பிச்சைதான் எடுத்து வந்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்கள் அடிக்கடி இதுபோன்ற தகராறில் ஈடுபடுவதாகவும், இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சங்கடப்படுவதாகவும் கூறி பிச்சைக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வடிவுடையம்மன் கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்