திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 13வது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் சாலையை சாத்துமா நகர் பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் தெரு, கிரிஜா நகர், காந்தி நகர், மேட்டுத் தெரு மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலை புதுப்பிக்கப்படாமல் குண்டும்குழியுமாக இருந்தது.

இதனையடுத்து சுமார் 30 லட்சம் செலவில் இந்த பகுதியில் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இவ்வாறு தார்ச்சாலை போடும்போது அங்கு மழைநீர் கால்வாய்யோரம் போடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் தொட்டிகளிலும் தார் கலந்த கருங்கற்களை கொட்டி மூடி விட்டனர். இதனால் கால்வாயில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சுசீலாராஜா மண்டலக்குழு கூட்டத்தில் தலைவர் தி.மு. தனியரசுவிடம் தெரிவித்து உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சம்பத் ஆகியோர் எம்ஜிஆர் நகர் பகுதிக்கு வந்தனர். அங்கு கவுன்சிலர் சுசீலாராஜா முன்னிலையில் தார் கலந்த கருங்கற்களால் மூடப்பட்ட மழைநீர் வடிகால் தொட்டிகளை சீரமைத்து மழைநீர் தங்கு தடையில்லாமல் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது