திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழப்பு: நாமக்கல் மாவட்டத்தில் தனியார் குளிர்பான ஆலையில் சோதனை

நாமக்கல்: திருவண்ணாமலையில் ரூ.10 பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே கனிகிலுப்பை எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில், ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. தம்பதியினர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 9 வயதில் ரித்தீஷ் என்ற மகனும், 6 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், காவியா ஸ்ரீ நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் குளிர்பான பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே காவியா ஸ்ரீ மூச்சுத்திணறி, மூக்கிலும் வாயிலும் நுரை வந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் காவியா ஸ்ரீயை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும் இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இறந்த சிறுமியின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் ரூ.10 பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் சிறுமி குடித்த Dailee குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

குஜராத் வெள்ளம்: 26 தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை

சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!!