திருவள்ளூர் மாவட்டத்தின் 6 கிராமங்கள் தத்தெடுப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR) சார்பில் இந்தியா முழுவதும் 52 இடங்களில் விவசாயக் கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கும் வகையில் ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் பெயர் ‘முதலில் விவசாயிகள் திட்டம்’. கடந்த 1980ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் இந்த மாதிரியான திட்டம் தீர்மானமாக்கப்பட்டது. இதன் நோக்கமே அனைத்து விவசாய செயல் திட்டங்களும் விவசாயிகளிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதுதான். விவசாய ஆராய்ச்சியிலோ, விவசாயத் திட்டங்களிலோ அல்லது விவசாய விளைபொருள் சார்ந்த விற்பனையிலோ விவசாயிகளின் கருத்துக்கள் முதன்மையானதாக இருக்க வேண்டும். இதனை செயல்படுத்தும் முயற்சியில் முதல்கட்ட முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான் இந்த திட்டம்.அதன்படி, சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத்துறை சார்பில் திருவள்ளூரில் இருக்கிற 6 விவசாயக் கிராமங்களை தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான விவசாய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். மேலும் அந்த விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களையும் கொடுத்து வருகிறார்கள். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தோட்டக்கலை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்தத் திட்டம் குறித்து அறிந்துகொள்ள, திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர். என்.கே. சுதீப்குமாரைத் தொடர்புகொண்டோம். அப்போது அவர் முதலில் விவசாயிகள் திட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும், விவசாயிகளின் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக பேசினார். அவர் பேசுகையில், “ முதலில் திருவள்ளூரில் இருக்கிற விவசாயக் கிராமங்களை களஆய்வு செய்தோம். அதன் விளைவாக அங்கு பயிரிடப்படும் பயிர்களின் நிலவரம், விவசாயிகளின் ஆர்வம் என அனைத்தையும் தெரிந்துகொண்டோம். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கோயம்பாக்கம், மேலக்கொண்டையார், கரையான் மேடு, பண்டிக் காவனூர், கிளாமாபாக்கம், தண்ணீர்க்குளம் 6 கிராமங்களை விவசாய வளர்ச்சிக்காக தத்தெடுத்து அங்குள்ள விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம். தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அதைத் தொடர்ந்து விவசாயத்தில் புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவது என எல்லா வகையான யோசனைகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறோம்.

திருவள்ளூர் மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இயற்கை உரங்கள் கொடுத்து வருகிறோம். அதேபோல, மீன் பண்ணை அமைக்க நினைப்பவர்களுக்கு மீன் குஞ்சுகள் வழங்குகிறோம். இதுபோக இந்தியா முழுவதும் இருக்கிற வேளாண் பல்கலைக்கழகத்தில் எந்த மாதிரியான கண்டுபிடிப்புகள் வந்திருக்கின்றன? என்ற தகவலை அறிந்து அங்கிருக்கிற கண்டுபிடிப்புகளை இந்தத் திட்டத்தின் கீழ் இருக்கும் கிராம விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம். அந்த வகையில் வாழை மரங்களுக்காக பெங்களூர் யுனிவர்சிட்டியில் தயாரித்த மருந்தை இங்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம். இதனால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதாவது பெங்களூர் யுனிவர்சிட்டி தயாரித்த மருந்தைப் பயன்படுத்தியதன் விளைவாக வாழையில் அதிக எண்ணிக்கையில் காய் காய்த்திருக்கிறது. குலை நல்ல திரட்சியாக வந்திருக்கிறது. வாழை இலையும் நன்கு அகலமாக விரிந்து வளர்கிறது.

கால்நடைகளைப் பொருத்தவரை ஆடுகளை வளர்ப்பதற்காக வழங்கி வருகிறோம். கூடுதலாக பசுமாடுகளுக்கு ஏற்படும் மடிநோய் பிரச்னையை சரி செய்வதற்கு மருந்து கொடுத்து மாடுகளை மடிநோயில் இருந்து காப்பாற்றுகிறோம். அதேபோல், நாங்களே இயற்கை தீவனம் தயாரித்து விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம். அந்தத் தீவனத்தை உட்கொள்ளுகிற மாடுகளில் பால் விகிதம் சராசரியாக அரை லிட்டர் வரை அதிகரித்து இருக்கிறது. இதுபோக, விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மண்புழு உரம் தயாரித்து வழங்குகிறோம். மேலும் இரண்டு அடி களை எடுக்கும் கருவி, சூரிய ஒளி பூச்சி கட்டுப்படுத்தும் கருவி, நெல் நேரடி விதைக்கும் கருவி, வாழைகளுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்து, கால்நடைகள் உண்ணிகள் நீக்கும் மருந்து, சொட்டுநீர்ப் பாசனம் என எல்லாவற்றையும் வழங்கி வருகிறோம். அதேபோல, அதிக மகசூல் தருகிற விதை நெல் ரகங்களை கொடுப்பது, புதிய ரக நெல் பயிர்களை அறிமுகப்படுத்துவது என பல சேவைகளை இந்த 6 கிராமங்களுக்கும் வழங்கி வருகிறோம். எங்களது திட்டத்தின் நோக்கமே விவசாயிகள் தன்னெழுச்சியாக வளர வேண்டும் என்பதுதான். நாங்கள் இல்லாமல் போனாலும் விவசாயிகளுக்கு இது சார்ந்த விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்’’ என்கிறார்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்