திருவள்ளூர் அடுத்த தொழுவூர் ஊராட்சியில் 10 நாட்களுக்கு மேலாகியும் வடியாத மழைநீரால் பொதுமக்கள் அவதி: இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூர் ஊராட்சியில் 10 நாட்களுக்கு மேலாகியும் வடியாத மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த தொழுவூர் ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டு மனைப்பட்டா இல்லாமல் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள குளத்தின் அருகே இவர்கள் குடிசை வீடு கட்டி வசித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் மழை நீர் இவர்களது வீடுகளுக்குள் புதுந்து விடும்.

இதனால் விஷ பூச்சிகளின் தொல்லை அதிகளவில் காணப்படும். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக இந்த பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை தண்ணீர் வடியவில்லை.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகளால் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குழந்தைகள் படிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

கடந்த 40, 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் இப்பகுதியில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா இல்லாததால் தொகுப்பு வீடுகள் கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்