Wednesday, September 25, 2024
Home » திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லுமா? ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லுமா? ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Karthik Yash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதானமாக இருப்பது ரயில் போக்குவரத்து. தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து 1.7.1856 அன்று தொடங்கப்பட்டது. முதல் நாள் ஒரு ரயில் ராயபுரத்தில் இருந்து வாலாஜாரோடு ரயில் நிலையத்திற்கும், இரண்டாவது ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூருக்கும் இயக்கப்பட்டது. தென்னிந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட முதல் நாளில் திருவள்ளூருக்கு ரயில் இயக்கப்பட்டது என்பது வரலாறு. அன்று முதல் இன்று வரை திருவள்ளூர் நகர மக்களுக்கு ரயில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

தற்போது திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. 11 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தை என்எஸ்ஜி 2 (நான் சபர்பன் கிரேட் 2) என்று ரயில்வே நிர்வாகம் தரம் பிரித்து தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது.

ரயில்வே கோட்ட ரயில் தலைமை இடமான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்எஸ்ஜி 3 என்ற நிலையில் இருக்கும்போது திருவள்ளூர் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என்எஸ்ஜி 2 என்ற நிலையில் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கனவாக கூடுதல் தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையமானது, சென்னை புறநகர் புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகவும் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. இவற்றில் 5 நடை மேடைகள், 24 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் அளவு நீளம் கொண்டது. மேலும் நடைமேடை ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை விரைவு ரயில்கள் செல்லும் நடைமேடையாக அமைந்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வது சுலபம். இந்த நடைமேடைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கூடுதலாக 4 நிமிடங்கள் மட்டுமே செலவாகும். இதனால் ரயில்வே கால அட்டவணை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

திருவள்ளூர் ஒரு முக்கிய தொழில் நகரமாகவும் வளர்ந்து வருகிறது. திருவள்ளூரில் இருந்து பெரும்புதூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கேட்டர்பில்லர், டெல்பி டி.வி.எஸ். போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதேபோல் காக்களூர் தொழிற்பேட்டையில் சுமார் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இது திருவள்ளூர் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சென்னையின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான பெரும்புதூர் தொழிற்பேட்டை திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த பெரும்புதூர் தொழிற்பேட்டையில் வேலை செய்பவர்களுக்கு உகந்த ரயில் நிலையமாக திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. மேலும் அங்குள்ள பல நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் போன்ற பகுதிகளில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் வண்டிகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.

திருவள்ளூர் நகரம் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. திருவள்ளூர் நகரைச் சுற்றி பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. தற்போது திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. மேலும் சென்னையில் பணிபுரியும் பலரும் திருவள்ளூர் நகரில் குடிபெயர்ந்து வருகின்றனர். சென்னை சென்றுவர புறநகர் ரயில்கள் இருப்பதால் தினமும் சென்னைக்குச் சென்று வருகின்றனர். எனவே நாளுக்குநாள் திருவள்ளூரிலிருந்து ரயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 37 லட்சம் மக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இது மேலும் அதிகரித்து உள்ளது. இவ்வளவு மக்கள் தொகைக்கு ஏற்ற போக்குவரத்து வசதியை ரயில்வே நிர்வாகம் அளிக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வளவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.

எனவே திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வட மாநில ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் நின்று சென்றால் பலரும் பயன்படுத்தி பயனடைவார்கள். இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கும் வருவாயும் அதிகரிக்கும். திருவள்ளூரில் நீண்ட தூர விரைவு வண்டிகள் நின்று செல்வதால் திருவள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சென்னை – திருவள்ளூர் மார்க்கத்தில் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளும் சுலபமாக திருவள்ளூர் வரை புறநகர் மின்சார ரயில்களில் வந்து விரைவு ரயில்களில் ஏறி பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால் சுமார் 10 லட்சம் மக்கள் பயனடைய வாய்ப்பிருக்கிறது.

மேலும் சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி, போரூர் போன்ற பகுதியில் உள்ள மக்களும் மாநகர பேருந்துகள் மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து விரைவு ரயிலில் ஏறிச் செல்ல வசதியாக இருக்கும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. இது சென்னை புறநகர் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. அதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையத்தை தாம்பரத்தை போன்று புறநகர் ரயில்களின் முனையமாகவும், தாம்பரத்தை போல திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் பெரும்பாலான ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருவள்ளூரில் நீண்ட தூர ரயில்கள் நின்று சென்றால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள அனைத்து பயணிகளும் வசதியாக பயன்படுத்திக் கொள்வார்கள். திருவள்ளூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதன் மூலம் சென்னை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தையும் சற்று குறைக்க முடியும். திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக 60 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றன.

இவற்றில் 11 ஜோடி ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன மேலும் சென்னை – கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டு காச்சேகுட எக்ஸ்பிரஸ், சென்னை – மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை – மும்பை எல்டிடி எக்ஸ்பிரஸ், சென்னை – பெங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய 9 ஜோடி எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பல ஆண்டுகளாக ரயில் பயணிகளும், ரெயில் பயணிகள் சங்கத்தினரும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பயணிகளின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா? என்பது பெரிய எதிர்பார்க்கப்படுகிறது.

* திருவள்ளூர் முதலிடம்
2020ம் ஆண்டு அரசின் புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் தனி நபர் வருமானம் ரூ.3.84 லட்சம் என முதல் இடத்திலும், கோவை ரூ.3.35 லட்சம் என இரண்டாம் இடத்திலும், சென்னை ரூ.2.66 லட்சம் என மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேபோல மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) திருவள்ளூர் மாவட்டம் ரூ.1,67,000 கோடி என முதல் இடத்திலும், சென்னை ரூ.1,47,000 கோடி என இரண்டாம் இடத்திலும், கோவை ரூ.1,37,000 கோடி என மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்த புள்ளி விவரம் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi