நேரடி விற்பனையில் அசத்தும் திருவள்ளூர் தம்பதி

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. தனியார் துறையில் பணியாற்றிய இவரும், வெளிநாட்டில் வேலை பார்த்த இவரது கணவர் செந்தில்குமாரும் 10 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்து கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கிடைக்கும் கொய்யாப்பழங்களை இவர்களே நேரடியாக சந்தைப் படுத்தி விடுகிறார்கள். அதோடு மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து அசத்தி வருகிறார்கள். இந்த ரோல்மாடல் தம்பதிகளை அவர்களது தோட்டத்தில் சந்தித்தோம்.

“நான் கல்லூரி முடித்துவிட்டு ஒரு தனியார் துறையில் வேலை பார்த்து வந்தேன். எனது கணவருக்கு வெளிநாட்டில் வேலை. அவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பியதும் சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என இருவரும் யோசித்தோம். எங்கள் இருவருக்குமே விவசாயம் சார்ந்த ஆர்வமும் இருந்தது. அதனால் விவசாயத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என திட்டமிட்டோம். அந்த சமயத்தில்தான் நண்பர் ஒருவர் மூலம் 10 ஏக்கர் விவசாய நிலம் குத்தகைக்கு வருவது தெரியவந்தது. இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது என நினைத்த நாங்கள் அந்த 10 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கினோம். 10 ஏக்கரிலும் கொய்யா பயிரிடலாம் என நினைத்தோம். அதனால், சீக்கிரம் காய்ப்புகளைத் தரும் வீரிய ஒட்டு ரக கொய்யாச் செடிகளை 2020ம் ஆண்டில் 10 ஏக்கர் முழுவதும் நட்டோம். இந்தக் கொய்யாச் செடிகளை அடர் நடவுமுறை அதாவது இடைவெளி குறைவாக நடவு செய்ததால் ஒரு ஏக்கரில் 900 முதல் 1100 செடிகள் வரை நட முடிந்தது. மொத்தமுள்ள 10 ஏக்கரில் கழிவுச் செடிகள் போக தற்போது சுமார் 8000 கொய்யா மரங்கள் இருக்கின்றன.

பொதுவாக கொய்யாவைப் பொறுத்தவரை ஏப்ரல் முதல் நவம்பர் வரை சீசன் நேரம். அந்த நேரத்தில் கொய்யாக்கள் நன்றாக காய்க்கும். எங்களிடம் அதிகமான மரங்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் அனைத்தில் இருந்தும் காய்களைப் பறித்து விற்பனை செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு பகுதியாக சுழற்சி முறையில் மரங்களைக் கவாத்து செய்து அந்த மரங்களில் இருந்து பழங்களை அறுவடை செய்கிறோம். சராசரியாக சீசன் நாட்களில் ஒரு நாளைக்கு அரை டன் அதாவது 500 கிலோ கொய்யா மகசூலாக கிடைக்கும். அதில் தினசரி 150 கிலோ வரை நாங்களே நேரடியாக விற்பனை செய்கிறோம். மீதம் இருக்கும் பழங்களை வியாபாரிகளே நேரடியாக தோட்டத்திற்கு வந்து பறித்து செல்வார்கள். நாங்களும் வியாபாரிகளும் பறித்தது போக மீதமிருக்கும் கொய்யாப் பழங்களை மதிப்புக் கூட்டலாம் என யோசித்து கொய்யாவில் ஜாம் செய்து விற்பனை செய்து வருகிறோம். அடுத்தக்கட்டமாக, கொய்யாவில் பற்பொடி, கொய்யா ஜூஸ் என மதிப்புக் கூட்டலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

கொய்யா மரங்களைப் பொறுத்தவரை இத்தனை ஆயிரம் மரங்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு முதலில் சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருந்தோம். இப்போது கால்வாய் முறையில் அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறோம். முடிந்தவரை கொய்யா மரங்களுக்கு செயற்கை உரங்கள் தெளிப்பது கிடையாது. எங்கள் பகுதிகளில் கிடைக்கும் இலைகளை வைத்து இலைக் கரைசல், பஞ்சக்கவ்யம், ஜீவாமிர்தம், பழக்கரைசல், மீன் அமிலம் என நீரில் கலந்து விடுகிறோம். முடிந்தவரை இயற்கை முறையிலேயே உரங்களைத் தயாரிக்கிறோம். வேலை ஆட்களின் கூலி, மெசின் செலவு, உட்பொருட்கள் என மாதம் அறுபது ஆயிரம் வரை செலவு வருகிறது. அதுபோக குத்தகை செலவு இருக்கிறது. சீசன் நேரத்தில் மாதத்திற்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வருமானம் வந்தாலும் செலவும் அதிகமாக இருக்கிறது.

கொய்யாத் தோட்டத்தைப் பொறுத்தவரை தண்ணீர் பாய்ச்சுவது, உரம் தெளிப்பது, கவாத்து செய்வது என தோட்டப்பணிகளை எனது கணவர் பார்த்துக் கொள்கிறார். விற்பனை சார்ந்த விசயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ எனக்கூறும் சசிகலா “ இந்த கொய்யாத் தோட்டத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பதிலும் ஆர்வம் இருக்கிறது. அதையும் வெற்றிகரமாக அமைப்போம்’’ என நம்பிக்கையோடு பேசி முடித்தார்.

தொடர்புக்கு:
செந்தில்குமார் : 73730 95548.

மற்ற பயிர்களைப் போலவே கொய்யாவுக்கும் நோய்த் தாக்குதல் மற்றும் பூச்சித் தொல்லைகள் அதிகம் வரும். பூப்பூக்கும் சமயத்தில் அஸ்வினி பூச்சி, மாவுப்பூச்சி, வேர்ப்புழு போன்றவற்றின் தாக்குதல் இருக்கும். அதைப்போல பருவம் மாறும்போது இலை அழுகல் நோய் வரும். இவை அனைத்திற்குமே இயற்கை வழித் தீர்வுதான் சிறந்தது. பத்திலைக் கரைசல், வேப்ப இலைக் கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறேன் என்கிறார் சசிகலா.

Related posts

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி