திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 120வது வார்டுக்கு உட்பட்ட, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.26.42 லட்சம் மதிப்பில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நடுக்குப்பம் மீன் அங்காடியானது 218.10 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு இரும்பு படிக்கட்டுகள் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு, தண்ணீர் வசதி, மின்வசதி மற்றும் கழிப்பறை வசதி மேம்பாடு உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடுக்குப்பம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சைல்ட்லைப் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கேரம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சதுரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி கலந்துரையாடினார். முன்னதாக, நடுக்குப்பம் பகுதியில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி