திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் மாடு முட்டி பள்ளி மாணவன் படுகாயம்: ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணை

சென்னை: திருவல்லிக்கேணியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பள்ளி சிறுவனை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப்(17). இவர் அருகில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் முகமது யூசுப், வீட்டில் அருகே தனது செல்போனில் நண்பர்களிடம் பேசி கொண்டிருந்தான். அப்போது சிங்கராச்சாரி தெருவில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்த மாடுகளில் ஒன்று, திடீரென முகமது யூசுப்பை முட்டி தள்ளியது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே மாட்டை விரட்டிவிட்டு மாணவனை மீட்டனர். மாடு முட்டியதில் மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் படி ஐஸ்அவுஸ் போலீசார் மாணவனை முட்டிய மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் திருவல்லிக்கேணியில் கடந்த ஒரு மாதத்தில் 4க்கும் மேற்பட்டோர் மாடு முட்டி காயமடைந்துள்ளதாகவும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றி வரும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது