திருத்தணி அருகே பாரம்பரிய நெற்பயிர் சாகுபடியில் அசத்தும் பட்டதாரி இளைஞர்: அதிக மகசூல் பெற்று சாதனை

திருத்தணி: பாரம்பரிய நெற்பயிர் (தூயமல்லி) சாகுபடியில் முதல் முறையாக வேளாண்மை துறை அலுவலர்கள் உதவியுடன் திருத்தணி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் சாதித்து வருகிறார். தமிழ்நாட்டில் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்த பயிருக்கு ஆதார விலையின்றி விவசாயிகள் நகர்புறங்களில் வேலை தேடி செல்கின்றனர். மேலும் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் கால கட்டத்தில், திருத்தணி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தில் கிராமத்திற்கு வந்து பயிர் சாகுபடி செய்து வருகிறார்.

திருத்தணி அருகே டி.சி.கண்டிகை ஊராட்சி ருக்மணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கமூர்த்தி என்பவர் பி.சி.ஏ படித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது வேலையை உதறிவிட்டு, விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கிராமத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் சாகுபடி செய்ய முடிவு செய்தார். அதற்காக வேளாண்மைத் துறை அலுவலர்கள் உதவியுடன் திருத்தணி பகுதியில் முதல் முறையாக பாரம்பரிய தூயமல்லி நெற்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் செய்து சாதித்துள்ளார்.

இயற்கை முறை பயிர் சாகுபடி குறித்து விவசாயி லிங்கமூர்த்தி கூறுகையில், ‘இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், நெற்பயிருக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு வரும் நிலையில், வேளாண்மை துறை அதிகாரிகளை நாடி அவர்களின் ஆலோசனைப்படி பாரம்பரிய தூயமல்லி நெற்பயிர் சாகுபடி செய்தேன். மானியத்தில் விதை நெல் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கி ஊக்குவித்தனர். 140 நாட்களில் பயிர் மகசூலுக்கு வந்துள்ளது. கூலி ஆட்கள் தேவை குறைவாகவும், ரசாயன உரங்கள் தவிர்த்து இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துவதால் செலவு குறைவாக உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 16 முதல் 18 மூட்டைகள் மகசூல் வந்துள்ளது. தூயமல்லி அரிசிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இயற்கை விவசாயத்தின் மீது எங்கள் பகுதி விவசாயிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது’ என அவர் கூறினார்.

* இரட்டிப்பு வருவாய்
உதவி வேளாண்மை இயக்குநர் பிரேம் கூறுகையில், ‘பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள், வேளாண் இடுபொருட்கள் வழங்கி, விவசாயிகளுக்கு வருவாயை பெருக்கும் முறைகள் குறித்து வேளாண் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நெல் ஜெயராமன் மரபுசார் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய தூயமல்லி ரகம் விதை நெல் 50 சதவீதம் மானியத்தில் வேளாண்மை வரிவாக்க மையத்திலிருந்து உயிரோட்டமான விதை விவசாய நிலத்தில் விதைத்த 28 நாட்களில் நாற்று நடப்பட்டு முழுமையாக வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும். இயற்கை உரங்கள் மூலம் பயிர் சாகுபடி செய்தால், 140 நாட்களில் பயிர் மகசூல் பெற முடியும். இதற்காக விவசாயிகளுக்கு வேளாண்மை அலுவலர்கள் உதவியாக இருந்து இயற்கை முறை பயிர் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் என்றார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை