திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் மீட்டது போலீஸ்..!!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. கடத்தப்பட்ட ஆண் குழந்தையை கள்ளக்குறிச்சியில் தனிப்படை போலீஸ் மீட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் குமார் மனைவி கமலினிக்கு கடந்த 22ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது குழந்தை திடீரென மாயமானது.

கமலினி சிகிச்சை பெற்று வந்த அதே வார்ட்டில் எஸ்தர் ராணி என்ற பெண்ணும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளனர். இதனிடையே பணி முடிந்து மாலையில் திரும்பி வந்து அர்ஜுன் குமார் தனது குழந்தையை தேடிய போது மாயமானது தெரியவந்தது. கமலினிக்கு நடித்து உதவி செய்வது போல் உமாவும், எஸ்தர் ராணியும் குழந்தையை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திச் சென்ற உமாவை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!