திருப்பூரில் நள்ளிரவு பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ: தையல் இயந்திரங்கள், துணிகள் எரிந்து சேதம்

திருப்பூர்: திருப்பூரில் நள்ளிரவு பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தையல் இயந்திரங்கள், துணிகள் எரிந்து சேதமானது. திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் இருந்து இடுவம்பாளையம் செல்லும் வழியில் பாலமணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு பின்னலாடை துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கு பயன்படக்கூடிய சிங்கர், ஓவர்லாக், பேட்லாக் தையல் இயந்திரங்கள் மற்றும் பின்னலாடை துணிகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் நிறுவனத்தில் இருந்து லேசான புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. அப்போது நிறுவனம் முழுவதும் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளர் பாலாமணி மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயில் ரூ.பல லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சேதமானது.  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு