திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அரசு நிதியுதவி பள்ளி ஒன்றில் பட்டப்பகலில் சிறுத்தை திடீரென புகுந்தது. அங்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தொழிலாளியை தாக்கியதால் மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் மேரி இமாகுலேட் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளிக்குள் திடீரென ஒரு சிறுத்தை புகுந்துள்ளது. இதை பார்த்ததும் அங்கிருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். அப்போது பள்ளியின் நுழைவு வாயிலில் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த புத்தரம் பகுதியைச் சேர்ந்த வேலு (47) என்பவரை சிறுத்தை ஆக்ரோஷமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது.

இதில் வேலுவின் தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு பெற்றோருடன் மீட்டு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை அடுத்து எங்கு சென்றது என தெரியாமல் அங்கிருந்தவர்கள் அலறினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து தாக்கிவிட்டு தப்பியது எப்படி என தெரியாமல் திணறினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பதறிய பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளி வளாகத்தின் முன்பு திரண்டனர். தொடர்ந்து சாலை வழியாகவே சென்ற சிறுத்தை திருப்பத்தூர் ரயில்வே நிலையம் வழியாக சென்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் கார் ெஷட்டினுள் சென்று பதுங்கியது. அப்போது கார் ஷெட்டில் இருந்து காரை எடுக்க முயன்ற 4 பேர் சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து உடனே காரில் ஏறி கதவை மூடிக்கொண்டனர்.

தொடர்ந்து அந்த காருடன் ஷெட்டில் வைத்து சிறுத்தையை வெளியே செல்ல முடியாத வகையில் அங்கிருந்தவர்கள் கதவை இழுத்து மூடினர். சிறுத்தை புகுந்துள்ள ஷெட்டில் காருக்குள் 4 பேரும் தவித்தபடி உள்ளனர். தகவல் அறிந்த திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி ஆல்பர்ட் ஜான், வனச்சரகர் சோழராஜன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒசூரில் உள்ள மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க திருப்பத்தூருக்கு வந்துள்ளனர். சிறுத்தை புகுந்துள்ளதால் பொதுமக்கள் ரயில்வே நிலைய சாலை வழியாக செல்ல காவல்துறையினர் தடை விதித்தனர்.

தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரை சுற்றி காடுகள் இல்லாத நிலையில் சிறுத்தை எப்படி நகருக்குள் வந்தது என்று தெரியாமல் பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்க வலை போன்ற பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் நகரம் முழுவதும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கலெக்டரும், எஸ்பியும் அங்கேயே முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் தகவல் அறிந்த வேலூர் மண்டல வனபாதுகாவலர் பத்மா திருப்பத்தூரில் வந்து சிறுத்தை பிடிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தினார். நகருக்குள் சிறுத்தை புகுந்துள்ள தகவலால் ெபாதுமக்களிடையே பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளும் திங்கட்கிழமை வரை 3 நாட்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

*ஷெட்டில் பதுங்கிய சிறுத்தை காரில் சிக்கிய 5 பேர் மீட்பு

திருப்பத்தூர் தனியார் கார் ஷெட்டில் காரை எடுத்துவரச் சென்றபோது சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த திருப்பத்தூர் டவுன் பகுதியைச் சேர்ந்த தினகரன், அஸ்கர், இம்ரான், வெங்கடேசன், வாட்ச்மேன் ஆரோக்கிய ராஜ் ஆகிய 5 பேரும் திடீரென காருக்குள் ெசன்று கதவை அடைத்து தப்பினர். சிறுத்தையோ அவர்கள் காரின் அருகே இருந்த ஷோபாவில் படுத்திருந்தது. இதனால் அனைவரும் காருக்குள்ளேயே பீதியுடன் முடங்கினர். அவர்கள் மாலை 4 மணியிலிருந்து காருக்குள்ளேயே முடங்கி இருந்தனர். அவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட உதவிகளும் ெகாடுக்க முடியவில்லை.

இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும் காரில் காற்ேறாட்டம் இல்லாததால் ஏசியை போட்டு உயிர் பிழைத்து உள்ளனர். ஏசி ஓடிக்கொண்டே இருந்தால் பெட்ரோல் கிட்டத்திட்ட காலியாகும் நிலைக்கு சென்று உள்ளது. இந்நிலையில் இரவு 9 மணியளவில் ஒசூரில் இருந்து வந்த வனத்துறை மீட்பு குழுவினர் கார் ஷெட்டுக்குள் 100 அடி உயரமுள்ள ஏணியை காரின் அருகே உள்ளே விட்டு இறங்கினர். பின்னர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளே இருப்பவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் சிறுத்தை காரின் அருகே இருப்பதால் வெளியே வர முடியாது என கூறி வர பயந்தனர்.

இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை மீட்க மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் உள்ளே வருவதாவும், அவர் உடன் இருப்பதாகவும், நீங்கள் தைரியாமாக வரலாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து இரவு 9.45 மணியளவில் ஏணி மூலம் 5 பேரும் அடுத்தடுத்தடுத்து வெளியே வந்தனர். வெளியே வந்ததும் காவலாளி ஆரோக்கியராஜ் மயக்கமடைந்து விழுந்தார். அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மற்றவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்த கட்டமாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திரைப்படங்களில் வரும் திக் திக் சம்பவம் போல இவை அனைத்தும் அங்கு அரங்கேறியது.

* எங்கிருந்து வந்தது?

பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை திருப்பத்தூர் அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்றம்பள்ளி பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து ஏராளமான ஆடு, மற்றும் மாடுகள் பலியானது. இதுகுறித்து கண்காணிக்க வனத்துறையினர் சிசிடிவி கேமராக்கள் வைத்து சிறுத்தை நடமாடத்தை கண்காணித்தனர். அப்போது சிறுத்தை இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது இந்த சிறுத்தை தான் ஆடு, மாடு உள்ளிட்டவர்களை கடித்து உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு ஜூலை 22-ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி