திருப்பாச்சூர் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததால் பெண் தொழிலாளர்கள் மறியல்

திருவள்ளூர்: திருப்பாச்சூரில் 100 நாள் வேலை வழங்கப்படாததை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈபட்டனர். திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய திருப்பாச்சூர், திருப்பாச்சூர், பெரிய காலனி, கோட்டை காலனி, தாட்கோ நகர், கொசவன்பாளையம், கொசவன்பாளையம் காலனி, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதியில் 1750க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் கடந்த 4 மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் 100 நாள் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 100 நாள் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் திருப்பாச்சூர் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க முயன்றும் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருப்பாச்சூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அதிகாரிகள் வராத காரணத்தால் மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்