திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை விசாரணை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விவகாரத்தில் நெய்யில் கலப்படம் செய்தவர்கள் யார், இதில் உள்ள உண்மை நிலவரத்தை கண்டறிய தனிப்படை விசாரணை நடத்தும்படி டிஜிபியுடன் நடந்த ஆலோசனையின்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் மாடு, பன்றிகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இதில் உள்ள உண்மை நிலவரம் என்ன? இதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டறிய வேண்டும் என்று பக்தர்களும் அரசியல் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்றிரவு டிஜிபி துவாரகா திருமலாராவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது திருமலை ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் எவ்வாறு கலப்படம் நடந்தது? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? இதற்கான பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பான உண்மையை கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும்படி முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டார். குறிப்பாக ஐஜி அல்லது அதற்கு இணையான அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த விசாரணையை விரைந்து தொடங்கவேண்டும். உண்மை நிலவரம் பக்தர்களுக்கு தெரிய வேண்டும் என்றும் சந்திரபாபு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மாஜி தலைவர் மீது வழக்கு;
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான கருணாகர்ரெட்டி நேற்று திருமலையில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடினார். பின்னர் கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றினார். மேலும் கற்பூரத்தை கையில் ஏந்தி. `நான் தலைவராக இருந்தபோது நெய்யில் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்’ என உறுதிமொழி எடுத்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார், அவரிடம் திருமலையில் அரசியல் பேசக்கூடாது என்றுக்கூறி அவரை தடுத்து திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திருமலையில் விதிமுறை மீறி அரசியல் பேசியது, பக்தர்களின் மனதை புண்படுத்தியது, ஜாதி மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் கருணாகர்ரெட்டி மீது திருமலை போலீசார் நேற்றிரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜாமினில் விடுவிப்பு

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.