திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு தங்க ரதத்தில் மலையப்பசுவாமி உலா : ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அதிகாலை 1.40 மணிக்கு மூலவர் கருவறையை சுற்றியுள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அப்போது, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பிரசாந்த்குமார் மிஸ்ரா, ஹிமாகோலி, எஸ்.எல்.பாட்டி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் சுவாமியை வழிபட்டனர். பின்னர் காலை 6 மணி முதல் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 9 மணியளவில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் பெண்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாடவீதிகளில் பக்தர்களின் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்திற்கு இடையே வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி முதல் 11 நாட்கள் 12 ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்து 3000 திவ்ய பிரபந்த பாசுரங்கள் பகல் பத்து உற்சவத்தில் ரங்கநாதர் மண்டபத்தில் பாராயணம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றிரவு முதல் 10 நாட்களுக்கு ராப்பத்து உற்சவம் தொடங்க உள்ளது. இதில் நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் ஒரு நாளைக்கு 100 பாசுரங்கள் என பாராயணம் செய்யப்பட உள்ளது. இரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட துவாதசியையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜனவரி 1 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

* 28ம் தேதி வரை டிக்கெட் விநியோகம்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஆதார் அட்டை மூலம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 28ம் தேதி வரை டோக்கன்கள் பக்தர்கள் பெற்று சென்ற நிலையில் 29ம் தேதி முதல் 1ம் தேதி வரையிலான டிக்கெட் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் பெறும் பக்தர்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட தேதியில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வித டோக்கன்கள், டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வந்தாலும் சுவாமி தரிசனம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

* 3.46 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை 40,638 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.21,455 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.கோயில் உண்டியலில் ₹3.46 கோடி காணிக்கை செலுத்தினர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு