திருப்பதி ஏழுமலையான் பிரமோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த பிரமோற்சவ கொடியேற்றத்திற்காக தயார் செய்யப்பட்ட தர்பை, கயிறுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின்போது கருடாழ்வார் கொடி ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தர்பை பாய் மற்றும் கயிறு வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை அருகே உள்ள தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து தேவஸ்தான வன அதிகாரி சீனிவாஸ் மற்றும் ஊழியர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தின் மீது தர்ப்பையால் செய்யப்பட்ட பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது. இவை நாளை கொடியேற்றத்தில் பயன்படுத்தப்படும். பிரமோற்சவம் தொடக்கத்தை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்படுகிறது. கொடிமரத்தில் கருட கொடி ஏற்றபடுவதன் மூலம் முக்கோடி தேவதைகளை பிரமோற்சவத்திற்கு அழைக்கும் விதமாக செய்யப்படுகிறது. ருத்விக்குகள் வேத மந்திரங்கள் பாராயணம் செய்தபடி கொடிமரத்தைச் சுற்றி தர்பை பாயை கொடி மரத்தில் தர்பை கயிறால் கட்டப்படுகிறது.

இதற்காக தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்களுக்கு முன்பே பணிகளை மேற்கொண்டனர். சிவ தர்பை மற்றும் விஷ்ணு தர்பை என இரண்டு வகையான தர்பைகள் உள்ளன. திருமலையில் விஷ்ணு தர்பை பயன்படுத்தப்படுவதால் தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம் செல்லூரில் இருந்து இந்த தர்பை சேகரித்து உலர் வெயிலில் ஒரு வாரம் காயவிட்டு முழுமையாக சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயாரிக்கப்படுகிறது. கொடி ஏற்றுவதற்கு 22 அடி அகலம் 7 அடியில் கொண்ட பாய் மற்றும் 200 அடி நீளமுள்ள தர்பை கயிற்றை தயார் செய்துள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது