திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்றிரவு மலையப்ப சுவாமி அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வந்தார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாகவும், மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குண்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும் மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது ஐதீகம். சுவாமி வீதியுலாவின்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

மேலும் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம் மற்றும் பக்தர்களின் கோலாட்டம், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படியபடி சுவாமி வீதியுலாவில் பங்கேற்றனர். மேலும் பக்தர்கள் பல்ேவறு சுவாமி வேடம் அணிந்து, சுவாமியின் லீலைகளை விளக்கும் வகையில் பங்கேற்றனர். இன்றிரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்