திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் மட்டுமின்றி பாதயாத்திரையாகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல சந்திரகிரி அருகே ஸ்ரீவாரி மிட்டா மலைப்பாதையும், அலிபிரி பகுதியில் பிரதான மலைப்பாதையும் உள்ளது. இவற்றில் அலிபிரி மலைப்பாதையில் 24 மணி நேரமும் பக்தர்கள் நடமாட்டம் இருக்கும்.

ஆனால் அடர்ந்த வனப்பகுதியின் மையப்பகுதியில் ஸ்ரீவாரி மிட்டா பாதை இருப்பதால், இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ஸ்ரீவாரி மிட்டா மலையடிவாரத்தில் பக்தர்கள் செல்லும் பாதையில் உள்ள தேவஸ்தான கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே சிறுத்தை நடமாடியுள்ளது. இதனைக்கண்ட இரவுக்காவலர் உடனடியாக தேவஸ்தான மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது உறுதியானது. அங்குள்ள தெரு நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை, மனித நடமாட்டம் காரணமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது தெரிந்தது. இதனிடையே நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சத்துடன் மலைப்பாதையில் சென்றனர்.

* `விலங்குகளுக்கு உணவு அளிக்காதீர்’
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்ரீவாரி மிட்டா பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இவ்வழியாக செல்லும் பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் உணவை அங்குள்ள நாய்களுக்கு வைக்கின்றனர். நாய்களை வேட்டையாட சிறுத்தை நள்ளிரவில் நடமாடுகிறது. எனவே பக்தர்கள் யாரும் உணவு பொருட்களை வன உயிரினங்கள் அல்லது நாய்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்’ என கூறினர்.

Related posts

ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்