திருப்பதி லட்டுக்கு சப்ளை செய்யப்படும் நெய்யின் தரம் அறிய அதிநவீன ஆய்வகம்: தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் குடோனில் பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திடமிருந்து நெய் டேங்கர் லாரி நேற்று திருமலைக்கு வந்தது. இதற்கான பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் இ.ஓ. ஷியாமளா ராவ் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பக்தர்களுக்கு மிகவும் சுவையான லட்டு பிரசாதம் வழங்க தரமான பசு நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர்கள், லட்டுகளின் தரத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

தரமான நெய்யால் லட்டுகளின் தரம் அதிகரிக்கும். கடந்த காலங்களில், நெய் சப்ளையர்கள் தரம், சுவை மற்றும் மணம் இல்லாத பசு நெய்யை சப்ளை செய்தனர். நெய்யின் தரத்தை சரிபார்க்க தேவஸ்தானத்தில் சரியான ஆய்வகம் இல்லை. தனியார் ஆய்வகத்தில் சரியாக சரிபார்க்கப்படவில்லை. எனவே தேவஸ்தானமே தற்போது புதிய அதிநவீன ஆய்வகம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் பணிபுரிபவர்களுக்கு மைசூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தரமான நெய் கொள்முதல் செய்வது தொடர்பாக நான்கு முக்கிய பால் நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நெய்யின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்த டெண்டர் நிபந்தனைகள் திருத்தப்பட்டுள்ளன. கர்நாடக கூட்டுறவு பால் தயாரிப்பு (நந்தினி நெய்) அங்கீகரிக்கப்பட்டு, நிறுவனத்திடம் இருந்து நேரடியாக நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உள்ளூர் கோயில்கள் மற்றும் தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக உள்ளூர் கோயில்களான திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில் மற்றும் சென்னை, வேலூர், பெங்களூர் ஆகிய இடங்களில் லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் செப்டம்பர் 2ம் தேதி 50 ஆயிரம், செப்டம்பர் 3ம் தேதி 13 ஆயிரம், 4ஆம் தேதி 9,500 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. எனவே, பக்தர்கள் உள்ளூர் கோயில்கள் மற்றும் தேவஸ்தான தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதத்தை பெறலாம் என அவர் தெரிவித்தார்.

₹3.45 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 57,390 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 20,628 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.45 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை முதல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம்செய்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு