திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்ததாக புகார்; திண்டுக்கல் நிறுவனத்தில் 9 மணி நேரம் சோதனை

திண்டுக்கல்: திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில், ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி 9 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். நெய் உள்ளிட்ட மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல், மதுரை ரோட்டில் பிள்ளையார்நத்தத்தில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி புட் ராஜ் மில்க் பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து, திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்ட நெய்யில், விலங்கின கொழுப்புகள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நெய்யை குஜராத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்ததில் மாடு, பன்றி கொழுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இதில் லட்டு செய்வதற்காக நெய் ஒப்பந்தம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் (பி) லிட் நிறுவனம் நெய்யில் கலப்படம் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. இதுகுறித்து ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவன தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் லெனி, கண்ணன் ஆகியோர், தங்களது பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும், திருப்பதி தேவஸ்தானம் எங்களது நெய் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்திய சான்று மற்றும் நாங்கள் அனுப்புவதற்கு முன்பு ஆய்வு செய்த சான்றும் தங்களிடம் உள்ளது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அனிதா, நிறுவனத்தின் கழிவுநீரை ஆய்விற்காக எடுத்து சென்றார்.

நேற்று காலை 9 மணிக்கு ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி ரவி, ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஆய்வை துவக்கினார். பால் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது? வெளிமாநிலம், வெளி மாவட்டம் அல்லது திண்டுக்கல் மாவட்டத்திற்குள் கொள்முதல் செய்யப்படுகிறதா எனவும் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரணை செய்தார். மேலும் அங்கிருந்த நெய், பால், பால்கோவா, பால் பேடா, பன்னீர், வெண்ணெய், தயிர், மோர், இனிப்பு போன்ற பொருட்களை ஆய்விற்காக எடுத்து கொண்டனர். இந்த ஆய்வு 9 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்