திருப்பதி லட்டு விவகாரத்தில் தாமரைக்கட்சிக்குள் நடக்கும் குடுமிபிடி சண்டை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுவையில் போலீசார் ஆதாரங்களை திரட்டி வருவதை கண்டு நிலஅபகரிப்பு கும்பல், அரசியல்வாதிகள் கதிகலங்கி போய் இருக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியை பிரான்ஸ் ஆட்சி செய்ததால் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள், குறிப்பிட்டவர்கள் இன்னும் வசித்து வர்றாங்க.. இவர்கள், பிரான்சு நாட்டில் இருந்து அவ்வப்போது புதுச்சேரியில் உள்ள தங்களது வீடுகளுக்கு வந்து செல்வது வழக்கம்.. ஒரு சிலர் நீண்ட காலமாக பிரான்சிலேயே தங்கிவிடுவார்கள்..

இதனை நோட்டமிட்ட நிலஅபகரிப்பு கும்பலும், ஒரு சில அரசியல்வாதிகளும் பல கோடி மதிப்புள்ள வீடு, நிலம், கடைகளை போலி உயில், பத்திரம் தயாரித்து அபகரிப்பு சம்பவங்களை அதிகமாக அரங்கேற்றி வர்றாங்களாம்.. மேலும் பிரபல கோயில்களின் நிலங்களையும் விட்டு வைப்பதில்லையாம்.. இந்நிலையில் புதிதாக வந்த பவர்புல் அதிகாரி, அபகரிப்பு கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறாராம்.. இதனால் நிலஅபகரிப்பு கும்பல், அரசியல்வாதிகள் கதிகலங்கி இருக்காங்களாம்…

திருநள்ளாறு காவல் நிலையம் சார்பில் நில மோசடி தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள சிவம் பெயர் கொண்டவர், மற்றும் காரைக்கால் நகர காவல் நிலையம் சார்பில் கோயில் நிலம் போலி ஆவணம் தயாரித்தல் வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் பிரமுகர் ஆகிய இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிச்சிட்டாங்களாம்.. இதுபோன்று புதுவையிலும் நில அபகரிப்பு கும்பல் பட்டியல் மற்றும் ஆதாரங்களை போலீசார் திரட்டிக்கிட்டு வர்றாங்களாம்.. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதால் கும்பல் பீதியில் உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சியில் தன்னை மதிக்காத தலைமைக்கு நெருக்கடி கொடுக்க திரைமறைவு வேலையில் மாஜி அமைச்சர் ஒருத்தர் இறங்கிட்டாராமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் கப்சிப்னு இருந்து வருகிறாராம்… மோசடி வழக்கில் சிக்கி இருப்பதால் தன்னை தலைமை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சக மாஜி அமைச்சர்களும்கூட பேசுவதை குறைத்து விட்டார்கள் என கடும் ஆதங்கத்தில் இருந்து வர்றாராம்.. தலைமை கண்டுகொள்ளாததால், விஷயம் தெரிந்த கட்சி நிர்வாகிகள்கூட தன்னை மதிப்பது இல்லைனு நெருங்கிய ஆதரவாளர்களிடம் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாராம் மாஜி அமைச்சரு..

வரும் காலங்களில் தலைமை தன்னுடைய பேச்சை கேட்க வேண்டும். தலைமைக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம்னு தனது ஆதரவாளர்களிடம் அவர் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளாராம்.. இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்கட்டமாக தலைமைக்கு எந்த வழியில் நெருக்கடி கொடுக்கலாம் என முடிவு செய்து, அதற்கான திரைமறைவு வேலையில் இறங்கியுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை பார்ட்டியில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு இல்லாததால போர்க்கொடி தூக்கிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டம் 2 எழுத்து இனிஷியலில் தொடங்கி குப்பம் என்று முடியுற தொகுதி இருக்குது.. இங்க இலை பார்ட்டியைச் சேர்ந்தவரும் பெயர்ல உலகத்தை வெச்சிருக்குறவருமான மாஜி சட்டமன்றத்தோட உறுப்பினரு இருக்குறாரு.. இவரு சமீபத்துல அந்த தொகுதியில ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சாராம்.. அதுல தமிழ்கடவுள் பெயர் கொண்ட மாஜி மந்திரி ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்துகிட்டாரு.. ஆனா அந்த கூட்டத்துக்கு இலை பார்ட்டியைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் யாருமே வரவில்லையாம்..

அதுல லோக்கல் நிர்வாகிகளுக்கு, முறையாக அழைப்பு கொடுக்கவே இல்லையாம்.. இதனால உள்ளூர் நிர்வாகிங்க, பொதுக்கூட்டத்துலயே எதிர்ப்பை பதிவு செய்து போர்க்கொடி தூக்கிட்டாங்களாம்.. கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சவங்க, சமாதானம் செய்ய முயற்சி செஞ்சும் சமாதானம் ஏற்கப்படலையாம்.. நாள் போகபோக, இலை பார்ட்டி கரைஞ்சிகிட்டே போகுது.. இதுல இருக்குறவங்களுக்கும் அழைப்பு கொடுக்கலைன்னா, பார்ட்டி காணாம போய்டும் போல இருக்குதேன்னு ரத்தத்தின் ரத்தங்களே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யூடியூப் சேனலில் கிண்டல் செய்து போடப்பட்ட திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழக பாஜ நிர்வாகிகளுக்குள் குடுமிபிடி சண்டையாமே..’’ என பரபரப்புடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘திருப்பதி லட்டுல மாட்டுக் கொழுப்பு கலந்துட்டதா எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருது.. இந்தநிலையில், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஒரு யூடியூப் சேனலில் ரெண்டு பேர் கிண்டல் செய்து வீடியோ போட்டாங்களாம்..

உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு தமிழக பாஜ பொறுப்பாளரான எச்.ராஜாவின் உத்தரவின்பேரில் மேற்படிப்புக்கு சென்றிருக்கும் மலையானவரின் தீவிர ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி ஆந்திரா போலீசில் புகார் செய்துள்ளாராம்.. ஆனால், யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது புகார் கொடுத்ததற்கு அந்த கட்சியில் உள்ள கார்த்திக் கோபிநாத் என்பவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து டிவிட் போட்டுள்ளாராம்.. இதனால், லட்டு விவகாரத்தில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது தாமரைக்கட்சிக்குள்ளேயே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எம்எல்ஏவுக்கு பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்துல பலாப்பழக்காரர் ஆதரவாளர்கள், டிப்பர் லாரி சங்கத்தினர் கொந்தளிப்பில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ மாவட்ட குவாரிகளில் எம்.சாண்ட், பி.சாண்ட் விலையேற்றத்தை குறைக்க வலியுறுத்தி ஹனிபீ நகரில் டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க… இதில் பலாப்பழக்காரரின் ஆதரவு எம்எல்ஏவான சபரிமலை சாமி பெயரை கொண்டவர் பங்கேற்றாராம்..

இவருக்காக பிரமாண்ட பிளக்ஸ் பேனரும் வைக்கப்பட்டிருந்ததாம்.. இதில் இலைக்கட்சியின் தூங்கா நகரின் மாவட்ட செயலாளர்னு அச்சிடப்பட்டிருந்ததாம்.. போராட்டத்திற்கு தனது ஆதரவு எம்எல்ஏ வருவது குறித்த தகவலை, பலாப்பழக்காரர் ஹனிபீ மாவட்ட ஆதரவாளர்களுக்கு தெரிவிக்கவில்லையாம்.. இதனால் தகவல் தெரியாமல் எம்எல்ஏவை வரவேற்கவோ, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவோ செய்யாமல் பலர் புறக்கணிச்சிட்டாங்களாம்…

மாவட்டத்தில், இலைக்கட்சியினரில் பெரும்பாலானோர் முழுமையாக சேலத்துக்காரர் பக்கம் சென்று விட்டாங்க.. இந்த சூழலில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தூங்காநகர் மாவட்ட செயலாளரான எம்எல்ஏவுக்கு, பிரமாண்ட பிளக்ஸ் பேனர் வைத்ததற்கு பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள், டிப்பர் லாரி சங்கத்தினர் மீது கடும்கோபத்தில் இருக்காங்களாம்… போராட்டம் முடிந்ததும் பலாப்பழக்காரரிடம் இதுதொடர்பாக கடுமையாக பேசப்போறதா ஆதரவாளர்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

Related posts

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேச்சு: இந்தியா தக்க பதிலடி

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி

அதிமுக நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு