திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது: கடந்த 50 நாட்களில் இன்று 3வது சிறுத்தை

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் கடந்த 50 நாட்களில் இன்று 3வது சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சந்திரகிரி வாரி மிட்டா மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வாரி மிட்டா பகுதியில் சிறுத்தை, கரடி ஆகியவற்றின் நடமாட்டம் மாலை முதல் அதிகாலை வரை இருக்கும். இதனால் அப்பகுதியில் மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை நடந்து செல்ல தடை உள்ளது. ஆனால் அலிபிரியில் 24 மணி நேரமும் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மலைப்பாதையில் கடந்த ஜூன் மாதம் தனது தாத்தாவுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்றது. பின்னர் சிறுவனை உயிருடன் விட்டுச்சென்றது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். அதில் ஒரு சிறுத்தை சிக்கியது. எனினும் தாய் சிறுத்தை உள்ளிட்டவை அந்த பகுதியில் சுற்றித்திரியலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த வாரம் 6 வயது சிறுமி லக்‌ஷிதாவை சிறுத்தை கவ்விச்சென்று கொன்றது. இதனால் திருப்பதி மலைப்பாதையில் குழந்தைகளுடன் செல்ல தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனிடையே சிறுத்தைகளை பிடிக்க மலைப்பாதையில் லட்சுமி நரசிம்மர் சன்னதி, மொகாலி மிட்டா, 35வது வளைவு ஆகிய 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. இதில் கடந்த 13ம்தேதி ஒரு சிறுத்தை லட்சுமி நரசிம்மர் சன்னதி பகுதியில் சிக்கியது.

அதனை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை லட்சுமி நரசிம்மர் சன்னதி அருகே வைக்கப்பட்டிருந்த கூண்டில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. இதனை வனத்துறையினர் மீட்டு திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் பிடிபட்ட 2 சிறுத்தைகளின் மரபணு சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை முடிவில் அந்த சிறுத்தைகள் மனிதர்களை தாக்கியிருப்பது தெரியவந்தால் அவற்றை அதே வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும் என்றும் இல்லையென்றால் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்