திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு ஆன்லைனில் டெண்டர்: செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மூலமாகவே அகில இந்திய அளவில் திறந்தமுறை ஒப்பந்தம் செய்யப்படுகிறது என திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு தயாரிக்க தேவையானவற்றில் ஓரளவு நெய் கர்நாடக மாநில அரசின் நந்தினி (கே.எம்.எப்) நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கேஎம்எப் நிறுவன தயாரிப்பான பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விலையை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதனால் கேஎம்எப் உடனான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில்லை என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் நெய் உள்ளிட்ட பொருட்கள் அகில இந்திய அளவில் திறந்த முறை ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்களில் ‘எல்ஒன் கேட்டகிரி’ உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 20 ஆண்டுகளாக தேவஸ்தானத்திற்கு தேவையான நெய்யில், கர்நாடக அரசின் நந்தினி நிறுவனத்திடம் இருந்து 20 சதவீதம் பெறப்பட்டு வந்தது.

லட்டு பிரசாதத்திற்கு எந்த இடத்தில் பொருட்கள் வாங்கினாலும், எங்களின் ஆய்வகத்தில் சோதனை செய்து தரம் நிறைவாக இருந்தால் மட்டுமே வாங்கப்படும். அவ்வாறு உள்ள நிலையில் (கே.எம்.எப்) நந்தினி பால் தலைவர், ‘தாங்கள் மட்டுமே தரமான நெய் வழங்குவதாகவும், விலை ஏற்றம் காரணமாக அந்த விலைக்கு தரமான நெய் வழங்க முடியாது’ என தவறான கருத்தை கூறியுள்ளார். மேலும் 50 ஆண்டுகளாக இதை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இவை முற்றிலும் தவறானது. தேவஸ்தான நிர்வாகம், அரசு நிர்வாகத்தை சார்ந்தது. எனவே எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் நேரடியாக யாருக்கும் வழங்க முடியாது. அனைத்தும் ஆன்லைன் மூலம் ‘எல் ஒன்’ டெண்டர் வழங்குபவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல நிறுவனங்களிடம் இருந்து தேவஸ்தானத்திற்கு தேவையான நெய் கொள்முதல் செய்யப்படுகிறது’ என்றார்.

உண்டியல் காணிக்கை ரூ.5.21 கோடி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 68,601 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 23,396 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.5.21 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டு சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

2 பிரம்மோற்சவங்கள்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை அதிக மாதம் வரக்கூடிய காலத்தில் வருடாந்திர (சாலகட்ல) பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் 2 பிரமோற்சவம் நடைபெற உள்ளது. ‘செப்டம்பர் 18 முதல் 26ம்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 15 முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் என்று செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு: மாநிலங்களவையில் இரங்கல்

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா