2 கிலோ மீட்டர் தூரம் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என ெதாடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நேர ஒதுக்கீடு, ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருப்பதிக்கு தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.

இதனால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. அறைக்கு வெளியே கிருஷ்ண தேஜா கெஸ்ட் அவுஸ் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்ய இயலும். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

அதிகளவு பக்தர்கள் வருகை காரணமாக தங்கும் விடுதி கிடைக்காமல் கடும் குளிரில் வெட்டவெளியில் காத்திருக்கின்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களிலும் கூட்டம் அதிகளவு உள்ளது. 4 நாள் விடுமுறை முடிந்து நாளை பணிகள் தொடங்கும் என்பதால் ஓரளவு பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை 76,104 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,412 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹2.92 கோடி காணிக்கை செலுத்தினர்.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது