திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா?: பவன் கல்யாண் கேள்வி!!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத தயாரிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெகன் யோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தான் இந்த மோசடிகள் நடைபெற்றதாக தற்போதைய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லட்டு மாதிரிகளை பரிசோதனை செய்த உத்தரவு வழங்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகளில் லட்டு பிரசாதத்தில் மாடு போன்ற விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது அரசியல் காழ்புணர்ச்சியுடன் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு என ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்நிலையில், ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி கட்சியான ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முந்தைய ஜெகன் ஆட்சி மீது முன் வைத்துள்ளார்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோயில் சொத்துகளை முந்தைய அரசு பாதுகாத்ததா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related posts

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்