திருப்பதியில் வனவிலங்குகளை விரட்ட கடந்த ஆட்சியில் பக்தர்களுக்கு குச்சி வழங்கியது நகைக்கும் விதமாக இருந்தது

*ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் பேட்டி

திருமலை : திருப்பதியில் கடந்த ஆட்சியில் வனவிலங்குகளை விரட்டுவதற்கு பக்தர்களுக்கு குச்சி வழங்கியது நகைக்கும் விதமாக இருந்தது என ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் கூறினார்.
ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக பதவியேற்ற வங்கலப்புடி அனிதா நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ள திருமலையில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் முக்கியம். தினந்தோறும் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இங்கு பக்தர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியான முறையில் தங்கள் ஆன்மிக பயணத்திற்கு வந்து செல்லும் விதமாக போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுப்பார்கள். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.

திருப்பதி திருமலை இடையே போக்குவரத்து தடையில்லாமல் இருக்கும் விதமாக போலீசார் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். செம்மரம் கடத்தல் விவகாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பகுதி வருகிறது என்றால், செம்மர கடத்தல்காரர்கள் வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டியதால் அதன் இருப்பிடம் அழிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் வனப்பகுதியில் இருப்பதற்கு உரிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை விட்டு விட்டு வனவிலங்குகளை விரட்டுவதற்கு பக்தர்களுக்கு குச்சி வழங்குவது கடந்த ஆட்சியில் அனைவரும் நகைக்கும் விதமாக இருந்தது. இனி செம்மரம் என்றாலே கடத்தல்காரர்களுக்கு பயம் வரும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மற்றும் வனத்துறை இணைந்து கடத்தல் காரர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை கைது செய்யப்படுவதோடு கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக இனிவரும் நாட்களில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!