திருப்பதி அருகே சினிமா பாணியில் துணிகரம்; நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ஒன்றரை கிலோ நகை கொள்ளை: இரண்டு பேர் எஸ்கேப்; சிக்கியவருக்கு தர்ம அடி

திருமலை: திருப்பதி அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள், ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அதில் 2 பேர் தப்பிய நிலையில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை சரமாரி தாக்கி பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பாப்பநாயுடுபேட்டை பஜார் தெருவில் ஒருவர் எஸ்எஸ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு விற்பனை மேளா நடந்து வருகிறது. தங்க நகை வாங்குபவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நகை கடையில் தினசரி ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துவிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வழக்கம்போல் கடையில் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அப்போது கடையின் முன் 2 பைக்குகளில் 3 மர்மநபர்கள் கையில் பையுடன் வந்து இறங்கினர். அவர்கள் கடைக்குள் துப்பாக்கிகளுடன் திடீரென புகுந்தனர். இதைக்கண்ட நகை கடை அதிபர், ஊழியர்கள் மற்றும் வாடிக்கயைாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது 3 வாலிபர்களில் ஒருவர் உள்பக்கமாக ஷட்டரை பாதி மூடிவிட்டு `யாராவது சத்தம் போட்டால் சுட்டுவிடுவேன்’ என மிரட்டினார்.

பின்னர் அங்கிருந்த கண்ணாடி ஷோகேஸ் ரேக்குகளை இரும்பு ராடால் உடைத்தனர். அதன்பின்னர் 3 வாலிபர்களும் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி அங்கு அடுக்கி வைத்திருந்த தங்க நகைகளை வாரி தங்கள் பைகளில் போட்டனர். சுமார் ஒன்றரை கிலோ நகைகளை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் ஷட்டரை திறந்து வெளியே வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கடையில் கொள்ளையர்கள் புகுந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் கடை முன் திரண்டனர் நகை பையுடன் வெளியே வந்த 3 மர்ம நபர்களும் பைக்கில் ஏறி தப்ப முயன்றனர். அவர்களை பொதுமக்கள் விரட்டிச்சென்றனர்.

அப்போது கொள்ளையர்கள் வைத்திருந்த இரும்பு சுழல் பந்துகளால் தாக்கியபடி சென்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பொதுமக்கள் கயிற்றால் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கஜூலாமண்டலம் போலீசார், அந்த கொள்ளையனை கைது செய்தனர். அவரிடம் இருந்த துப் பாக்கி மற்றும் இரும்பு கம்பியை பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் நகை கடையில் கொள்ளையடிக்க வந்த கும்பல், திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ஜூவோடி நகரை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. கொள்ளையர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களாக அந்த நகைக்கடையை நோட்டம்விட்டு கொள்ளையை அரங்கேற்றியது தெரிந்தது. பிடிபட்ட வாலிபரின் பெயர், விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. மேலும் சுமார் ஒன்றரை கிலோ நகையுடன் தப்பிய 2 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related posts

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செங்கல் விலை உயர்வு..!!

பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் வட்டாட்சியர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்