நாடு முழுவதும் புயலை கிளப்பி உள்ள திருப்பதி லட்டு சர்ச்சை : தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என ஒன்றிய, மாநில அரசுகள் எச்சரிக்கை!!

ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை ஆந்திர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிப்பில் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் நாரா.லோகேஷ் திருப்பதி பேட்டி :கடந்த முறை எங்கள் ஆட்சியின்போது கர்நாடக அரசின் கேஎம்எப் நிறுவனத்திடம் தரமான நெய் கொள்முதல் செய்து பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தனிநபருக்காக அந்த நெய் டெண்டரை ரத்து செய்து அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி உள்ளனர். அந்த நெய்யில்தான் தற்போது கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்.

ஒன்றிய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேச்சு : ஆந்திரப் பிரதேச முதல்வர் கூறியது மிகவும் கவலைக்குரியது. விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதோடு, குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

ஆந்திர முதலமைச்சர் எச்சரிக்கை : திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா : திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். திருப்பதி லட்டு தொடர்பாக தற்போதைய அறிக்கையை அளிக்கும்படி கேட்டுள்ளேன். திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபிஐ விசாரணைக் கோரி கடிதம் : திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு ஆந்திர காங். கடிதம் எ அனுப்பி உள்ளது. சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அமித்ஷாவுக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கடிதம் எழுதி உள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

உள்ளத்தில் உள்ள குறைபாடுகளைத் தூக்கி எறியுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்!