திருமங்கலம் அருகே இரவில் பாராக மாறிய உலர்களம்: பாட்டில்களை உடைத்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே மறவன்குளம் கிராமத்தில் உள்ள உலர்களத்தில் மர்மநபர்கள் காலி மதுபாட்டில்களை உடைத்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கரடிக்கல், உரப்பனூர், மறவன்குளம், சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விரிசங்குளம், சாத்தங்குடி, காண்டை, அம்மாபட்டி, பன்னீகுண்டு, காங்கேயநத்தம், நடுக்கோட்டை, கீழக்கோட்டை, செங்கபடை, நேசனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல், சோளம், மக்காச்சோளம் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அறுவடை செய்த தானியங்களை உலரவைக்க ஒரு சில கிராமங்களில் உலர்களம் உள்ளது. பல கிராமங்களில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் தானியங்களை சாலைகளில் உலர வைக்கின்றனர்.

திருமங்கலத்தை அடுத்துள்ள மறவன்குளம் கிராமத்தில் உலர்களம் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள இந்த உலர்களத்தில் பெரிய மறவன்குளம் மற்றும் சின்ன மறவன்குளம் கிராம விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வயல்வெளிகளில் விளையும் நெல், சோளம், மக்காசோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை இந்த களத்தில் பிரித்தெடுத்து உலரவைத்து மூடைகளில் கட்டி விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், மறவன்குளம் உலர்களத்தில் இரவு வேளையில் மது அருந்தும் மர்மநபர்கள் காலி மதுபாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் டம்ளர்களை களத்தில் வீசிவிட்டும் செல்கின்றனர். கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதால் தானியங்களை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

களத்தை சுத்தப்படுத்தி தானியங்களை உலரவைத்து எடுத்த பின்பு அதே போல் மீண்டும் மதுபாட்டில்களுடன் மர்மநபர்கள் உலர்களத்தில் வந்து நாசம் செய்து செல்வதால் பல விவசாயிகள் உலர்களத்தை பயன்படுத்த முடியாமல் சாலையில் உலர வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலர்களம் இல்லாத பகுதியில் சாலையில் உலர வைக்கும் இந்த காலத்தில் களம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மறவன்குளம் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடமும் அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

Related posts

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்