திருமலையில் நடைபெற உள்ள பத்மாவதி பரிணயோத்சவத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு-இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது

திருமலை : திருமலையில் நடைபெற உள்ள பத்மாவதி பரிணயோத்சவத்திற்காக ₹24 லட்சத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவத்திற்காக தேவஸ்தான தோட்டக்கலைத் துறையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தேவஸ்தானத்தை சேர்ந்த 30 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 50 மலர் அலங்கார நிபுணர்கள் பரிணய உற்சவ மண்டபத்தை அலங்கரித்ததாக தோட்டக்கலை இயக்குனர் ஸ்ரீநிவாசுலு தெரிவித்தார். இதற்காக புனேவைச் சேர்ந்த நன்கொடையாளர் ₹24 லட்சத்துடன் அரங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாள் கஜவாகனத்திலும், இரண்டாம் நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருடவாகனத்திலும் மலையப்பசுவாமி எழுந்தருள உள்ளார். மறுபுறம், பரிணய உற்சவ மண்டபத்திற்கு ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்கள் தனி பல்லக்கில் எழுந்தருள உள்ளனர்.

புராணங்களின்படி, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கலியுகத்தின் தொடக்க நாட்களில், மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து சீனிவாசனாக பூமிக்கு வந்தார். அப்போது நாராயணவனத்தை ஆட்சி செய்த ஆகாசராஜா தன் வளர்ப்பு மகளான பத்மாவதியை திருமணம் செய்து கொடுத்தார். ஆகாசராஜா சித்திரை மாதம் தசமி அன்று நாராயணவனத்தில் தனது மகளை கன்னியாதனம் செய்து கொடுத்ததாக வெங்கடாசல மகத்யம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.

பத்மாவதி சீனிவாச திருக்கல்யாணத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு சித்திரை மாதமும் தசமி தினத்திக்கு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் மொத்தம் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணய உற்சவம் 1992 முதல் நடைபெற்று வருகிறது. அன்றைய நாராயணவனத்தின் அடையாளமாக, திருமலை நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதியின் பரிணய உற்சவம் நடைபெறுகிறது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்