வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்செந்தூரில் மாசி திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சிகளான கடந்த 20ம் தேதி சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்திலும், 21ம் தேதி காலை சுவாமி வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளினர்.

9ம் திருவிழாவான நேற்று பகலில் பல்லக்கிலும், இரவில் குமரவிடங்கப்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், அதிகாலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டது. காலை 7.20 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வந்த தேர், காலை 9.05 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் காலை 9.20 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தது.

விழாவில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக சுகாதாரம், குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. நாளை இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. 25ம் தேதி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு