திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் அவதூறு கருத்து.. கோவில் அரசியல் செய்வதற்கான இடம் இல்லை என ஐகோர்ட் கருத்து!!

நெல்லை : கோவில் அரசியல் செய்வதற்கான இடம் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் ஜெய் ஆனந்த் என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.இந்த கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது, அறநிலையத்துறை பழங்கால கற்களை பெயர்த்தெடுத்துவிட்டு, டைல்ஸ் கற்கள் ஒட்டுவதாக எக்ஸ் வலைத்தளத்தில் ஜெய் ஆனந்த் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையிலேயே கோவிலில் கற்கள் தான் பதிக்கப்பட்டு வந்தது. எனவே ஜெய ஆனந்த் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி அர்ச்சகர் ஜெய் ஆனந்த ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் தான் எக்ஸ் தளத்தில் மாற்று கருத்து பதிவிட்டதாக கூறி, மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட அர்ச்சகர் கோவிலில் பணியாற்றி கொண்டு, அறநிலையத்துறைக்கு எதிராக அவதூறு செயலில் ஈடுபட்டதால் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி புகழேந்தி, கோவிலில் அர்ச்சகராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிடுவதா?. நீங்கள் அரசியல் செய்வதற்கு கோவில் உகந்த இடம் கிடையாது. இது போன்று அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு அர்ச்சகர் அவதூறு கருத்துக்களை பரப்பினால் பக்தர்கள் இடையே என்ன நிலை ஏற்படும் என்றும் இந்து அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இந்து அறநிலையத்துறை விரிவாக அறிக்கை அளிக்கவும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

Related posts

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு