திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ஜன்னல் வழியாக பணம், நகைகள் வீச்சு

திண்டிவனம் : திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்துனர். அதிர்ச்சி அடைந்த ஜன்னல் வழியாக பணம், நகைகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் சார் பதிவாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பத்திரம் பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் விழுப்புரம் விஜிலென்ஸ் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர் ஈஸ்வரி உள்பட 10க்கும் மேற்பட்டோர் ஒலக்கூர் பி.டி.ஓ. சரவணகுமார் முன்னிலையில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களை கண்டவுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்கள் கையில் வைத்திருந்த கட்டுக்கட்டாக பணம், நகை மற்றும் பேங்க் பாஸ்புக் ஆதார் கார்டு ஆகியவற்றை ஜன்னல் வழியாக வீசி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றனர்.

அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் கணக்கில் வராத 2.5 லட்சத்திற்கும் மேலான பணம் மற்றும் அங்கிருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். மேலும் அருகே உள்ள ஆவண எழுத்தாளர் அலுவலகத்திலும் சோதனை செய்தனர். இதுவரையில் யாரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் உரிய ஆவணங்கள் இருப்பவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த டி.எஸ்.பி. ஜன்னல் வழியே பணத்தை வெளியில் வீசிய அண்ணம்புதூர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது நிலம் வாங்க பணம் கொண்டு வந்ததாகவும் மீதி பணத்தை சார் பதிவாளர் முன்னிலையில் நில விற்பனையாளரிடம் வழங்க வைத்திருந்ததாகவும், திடீர் சோதனையால் பணத்தை வெளியில் வீசியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பணம் கொண்டு வரக்கூடாது எனவும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும், இதன்மூலம் 2 லட்சம் வரையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு