காலக்கொடுமை

வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதேபோல் வறுமையின் தாக்கம் நீடிக்கும் நாடுகள் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தவகையில் தற்போது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு மனித வறுமை-மனிதவள மேம்பாட்டு அமைப்பு புதிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘உலகளவில் போர் மற்றும் அமைதியின்மை நிலவும் நாடுகளில் வசிக்கும் 45.50 கோடி மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர்.

இது மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். உலகளவில் 27.9 சதவீதம் குழந்தைகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 112 நாடுகளில் வசிக்கும் 630 கோடிபேரில் 110 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்,’’ என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேலும், ‘‘இந்தியாவை பொறுத்தவரை 23.40 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தானில் 9.30 கோடி மக்களும், எத்தியோப்பியாவில் 8.60 கோடி மக்களும், நைஜீரியாவில் 7.40 கோடி மக்களும், காங்கோ நாட்டில் 6.60 கோடி மக்களும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்,’’ என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதன்படி வறுமையின் தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி வறுமை என்பது முதலில் பசியை குறிக்கிறது.

அதே நேரத்தில் இது ஆபத்தான பணிச்சூழல்கள், பாதுகாப்பற்ற வீடுகள், சத்தான உணவு பற்றாக்குறை, நீதிக்கான சமத்துவமின்மை, சுகாதார பாதுகாப்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், பட்டினிப்பிரச்னைகள், வீடற்ற தன்மை, அடிப்படை வசதிகள் இல்லாமை என்று அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது வறுமை. இவை அனைத்தையும் கணக்கிட்டு முழுமையாக ஆய்வு செய்த பிறகே வறுமை பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த கணக்கீட்டின் படி பசியில் மட்டுமல்ல. பல்வேறு நிலைகளிலும் 23.40 கோடி இந்தியமக்கள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது அம்பலமாகியுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்திலும் நாடு விஞ்ஞானத்திலும், தொழில் வளர்ச்சியிலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. நவீன கட்டமைப்புகள், கண்டுபிடிப்புகள், சாதனைகள் என்று அனைத்திலும் சாதனை படைத்து வருவதாக ஒன்றிய ஆட்சியாளர்கள் தினமும் வெளியிடும் அறிக்கைகள் அணிவகுத்து நிற்கிறது. கடந்த 9ஆண்டுகளில் வறுமையின் விகிதமானது 18 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனாலும் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா என்பது தான் காலக்கொடுமை. வறுமை என்பது நிதி ஆதாரங்களின் பற்றாக்குறை மட்டுமல்ல. மனிதர்களின் கண்ணியத்தை வறுமை சிதைக்கிறது. வாய்ப்புகளை வரம்பிடுகிறது. துன்பத்தின் சுழற்சியை நிலைநிறுத்துகிறது.

இதை கருத்தில் கொண்டே ‘வறுமை என்பது வன்முறையின் மோசமான வடிவம்’ என்றார் தேசத்தந்தை மகாத்மாகாந்தி. மதத்திற்காக கோட்சேவை தூக்கிப்பிடிக்கும் ஆட்சியாளர்கள், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மகாத்மாவின் சிந்தனை குறித்தும் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் வறுமை என்னும் இருள்விலகும். மக்களின் வாழ்க்கை தரமும் உண்மையாக ஔிரும் என்பதே நிதர்சனம்.

Related posts

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை