டிக்கெட் எடுக்க சொன்னதால் மாநகர பஸ் நடத்துனரின் கழுத்தை அறுத்த வாலிபர்: மூலக்கொத்தளத்தில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளம் பகுதியில் மாநகர பஸ்சில் டிக்கெட் எடுக்கும்படி கூறியதால் பிளேடால் நடத்துனரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சூளைமேடு, மேத்தா நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (56). மாநகர பேருந்து நடத்துனரான இவர், பேசின்பிரிட்ஜ் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் வரை சென்ற மாநகரப் பேருந்தில் (தடம் எண் 59) பணியில் இருந்தார். வள்ளலார் நகர் நோக்கி சென்ற பேருந்து மூலக்கொத்தளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அங்கு 22 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் பேருந்தில் ஏறினர். அவர்களிடம், பயணச்சீட்டு எடுக்குமாறு ஜெகதீசன் கூறியுள்ளார். அதில் ஒரு வாலிபர், என்னிடமே பயணச்சீட்டு எடுக்கச் சொல்கிறாயா என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

ஜெகதீசன் தொடர்ந்து பயணச்சீட்டு எடுக்கச் சொன்னதால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து ஜெகதீசன் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ஜெகதீசனுக்கு கழுத்து மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறி கூச்சலிட்டனர். இதனால், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து அந்த வாலிபர் தப்பியோடினார். பேருந்தில் இருந்த பயணிகள், படுகாயமடைந்த ஜெகதீசனை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது