இடியுடன் மழை சில நாட்களுக்கு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் இருந்து தமிழ்நாடு பகுதி நோக்கி வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதனால் தற்போது வெப்ப நிலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் இயல்புநிலையில் இருந்து 4 செல்சியஸ் வரையில் வெப்ப நிலை குறைந்துள்ளது. கரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 140மிமீ மழை பெய்துள்ளது. கூடலூர் 80மிமீ, சின்னகல்லாறு 70மிமீ, நடுவட்டம், பந்தலூர், வால்பாறை 60மிமீ, மேல்பவானி, செருமுல்லி, சோலையாறு 50மிமீ, சின்கோனா, தேவாலா 40மிமீ, சிறுவாணி, மக்கினாம்பட்டி, பொள்ளாச்சி, புழல் 30மிமீ, கொரட்டூர், பூண்டி, திருத்தணி, தாமரைப்பாக்கம் 20மிமீ, பள்ளிப்பட்டு, அரக்கோணம், சோழவரம், செங்குன்றம், மாதவரம், திருவள்ளூர், திருவாலங்காடு, பொன்னேரி, ஆனைமலை தாலுகா, சென்னை டிஜிபி அலுவலகம், பெரம்பூர், சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் 10மிமீ மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி