நாடாளுமன்றம் செல்லும் மூன்று இளம் வயது பெண் எம்பிக்கள்

நன்றி குங்குமம் தோழி

2024 நாடாளுமன்ற தேர்தலில் 797 பெண் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினராலும், சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். இதில் 25 வயதே நிறைந்த மூன்று இளம் வயது பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வது பலரின் கவனம் பெற்றுள்ளது.மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக பா.ஜ.க 69 பெண் வேட்பாளர்களையும், காங்கிரஸ் 41 பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்படி 30 பா.ஜ.க பெண் வேட்பாளர்களும், 14 காங்கிரஸ் பெண் வேட்பாளர்களும், 3 தி.மு.க பெண் வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் மச்லிஷாஹர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்ட 25 வயதான பிரியா சரோஜ் மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 25 வயதான சஞ்சனா ஜாதவ் பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட 25 வயது சாம்பவி சவுத்ரி வெற்றி பெற்று இளம் வயது பெண் எம்பிக்கள் என்கிற அடைமொழிக்குள் அசத்தியுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களில் 16 விழுக்காட்டினர் 40 வயதிற்கும் குறைவானவர்கள். வெற்றி பெற்ற 74 பெண் வேட்பாளர்களில் 30 பேர் ஏற்கனவே மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 12 பெண் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் அதில் 11 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது நாட்டின் 18வது மக்களவை உறுப்பினர்களாக 13.62 விழுக்காடு பெண்கள் தேர்வாகியுள்ளனர். மாநிலங்கள் வாரியாக உத்தரப்பிரதேசத்தில் ஏழு பெண் வேட்பாளர்களும், மத்தியப் பிரதேசத்தில் ஆறு பெண் வேட்பாளர்களும், தமிழகத்தில் ஐந்து பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். கட்சி வாரியாக பார்க்கும் போது திரிணாமுல் காங்கிரஸில் வெற்றி பெற்ற 29 வேட்பாளர்களில் 38 விழுக்காட்டினர் பெண்கள்.

கேரள மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியிலும், சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தியும் தோல்வியை தழுவினர்.2004ல் இருந்து பார்க்கும் போது அந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 45 பெண்களும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் 58 பெண்களும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 62 பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

சாம்பவி சவுத்ரி: பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அசோக் சவுத்ரியின் மகள். இவர் சமஸ்திபூர் தொகுதியில் காங்கிரஸின் சன்னி ஹசாரியை கடும் போட்டிக்கு மத்தியில் தோற்கடித்தார். முன்னதாக இத்தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்த போது, சாம்பவியை என்.டி.ஏ. கூட்டணியின் இளம் வேட்பாளர் என்று பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

பிரியா சரோஜ்: பாஜகவின் சிட்டிங் எம்பியான போலாநாத்தை எதிர்த்து போட்டியிட்ட பிரியா சரோஜ் மச்லிஷாஹர் தொகுதியில் 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மூன்று முறை எம்பியாக இருந்த தூபானி சரோஜின் மகள்.

சஞ்சனா ஜாதவ்: ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் சஞ்சனா ஜாதவ் வெற்றி பெற்றார். இவர் பா.ஜ.க.வின் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சஞ்சனாவின் கணவர் கப்டன் சிங் ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருக்கிறார்.

தொகுப்பு: மணிமகள்

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!