தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், மீனவர் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்: வியாபாரிகளும், பொதுமக்களும் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தென்மாவட்டங்களில் பிரசாரத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை நாங்குநேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கன்னியாகுமாரி, நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர், தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். நேற்று காலை தனியார் விடுதியில் இருந்து நடைபயிற்சி மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள காமராஜ் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற அங்கு வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

காய்கறி மார்க்கெட் முழுவதும் வலம் வந்த மு.க.ஸ்டாலின், அங்கு காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் இந்த காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன? எவ்வளவு நேரம் வியாபாரம் செய்வீர்கள்? லாபம் கிடைக்கிறதா? என்று கேள்விகள் கேட்டார். மேலும் வியாபாரிகளிடம், நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் திமுகவுக்குதான் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். அப்போது கனிமொழி எம்.பி.,யை சுட்டிக் காட்டி, இவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளும், பொதுமக்களும் நடந்து வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆங்காங்கே நிறுத்தி ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அதன்பின்னர் மீனவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய லயன்ஸ் டவுன் பகுதிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு 7வது தெருவில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். திடீரென முதலமைச்சரை பார்த்த பொது மக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஒருவர் தனது குழந்தையை முதலமைச்சர் கையில் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக தான் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு புறப்பட்டு சென்றார். சுமார் ஒரு மணிநேரம் தூத்துக்குடி நகரில் நடந்தே சென்று பொதுமக்கள், வியாபாரிகளை சந்தித்து முதல்வர் வாக்கு சேகரித்தார். முதல்வருடன் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் சென்றனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?