பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!!

தூத்துக்குடி: பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் தூய பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்றது. இந்த திருவிழா வருடந்தோறும் 10 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். 441வது ஆண்டு பனிமய மாதா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

இந்த ஆண்டு தூத்துக்குடி மறை மாவட்டத்தின் 100வது விழாவையொட்டி தங்க தேர் விழாவும் சேர்ந்து வந்துள்ளதால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. தங்க தேர் தயாரிக்க ஜப்பான் நாட்டில் இருந்து தங்க இலைகள் வரவழைக்கப்பட்டு தங்க தேர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துக்கு முன்னதாக தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்ற திருப்பலிக்கு பிறகு கொடியானது பவனியாக எடுத்துவரப்பட்டு கோயில் முன்பாக உள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

கொடிமரத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளை நிற புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டு கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவிழா பாதுகாப்புக்காக மொத்தம் 1,400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தங்க தேர் திருவிழா நடைபெறுவதையொட்டி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பக்தர்களுக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு