தூத்துக்குடி பனிமயமாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது: ஆயிரக்கணக்கான இறைமக்கள் பங்கேற்றனர்

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா பேராலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டு மனம் உருகி பனிமய மாதாவை வழிபட்டனர். வருகிற ஆக.5ம் தேதி தங்கத்தேரில் மாதாவின் திருவுருவ பவனி நடக்கிறது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவை காண தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலம் மற்றும் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்தாண்டு தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இது, முடிந்ததும் காலை 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இறைமக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை 4.30 மணிக்கு ெஜபமாலை, 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 3 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, இரவு 7.15 மணிக்கு ெஜபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும். மேலும் பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.

இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான 10ம் திருவிழாவன்று (ஆகஸ்ட் 4ம் தேதி) இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. 5ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், காலை 7 மணிக்கு கோவா உயர்மறைமாவட்ட பிஷப் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. முக்கிய வீதிகளில் தேர் பவனி நடக்கிறது. பகல் 12.30 கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தங்கத் தேர் நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலங்கை மன்னார் ஆயர் இம்மானுவேல் பர்னாண்டோ தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

Related posts

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்

யோக கலைகளின் முன்னோடி யானை: பாகன் விளக்கம்