தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்


தூத்துக்குடி: தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து, அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் துவங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர் காமராஜர் மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல் சேவை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் சேவையும் உள்ளது. இதுதவிர கடந்த மாதம் 16ம் தேதியில் இருந்து சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மீண்டும் சரக்கு தோணி போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் மாலத்தீவுக்கு இடையேயான நேரடி தோணி சேவை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடல்காற்று சீசன் காலமான மே முதல் செப்டம்பர் வரை இந்த வழித்தடத்தில் தோணி போக்குவரத்து நிறுத்தப்படும். தற்போது கடல்காற்று சீசன் முடிவதையடுத்து மீண்டும் தோணி போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து சரக்கு தோணி உரிமையாளர்கள் கூறுகையில், ‘சரக்கு தோணி போக்குவரத்து மீண்டும் துவங்கப்படுவதன் மூலம் வாராந்திர அடிப்படையில் செலவு குறைந்த மற்றும் விரைவான சேவை வழங்கப்படுகிறது. அட்டு, ஹிதிதாதூ மற்றும் மாலத்தீவு போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து இதில் அடங்கும். அருகில் உள்ள 1,500 தீவுகளுக்கும் நேரடியாக சென்று சரக்குகளை கையாளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு