தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதம் உளுந்து, பாசிப்பயறு மகசூல் மக்கியதால் அடிமாட்டு விலைக்கு கேட்கும் வியாபாரிகள்

*பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த நிலையில் உளுந்து, பாசிப்பயறை வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பயிர் காப்பீடு இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், நறுமணச்செடிகள் போன்றவை பயிரிடப்பட்டன.

புரட்டாசி மாதம் இரண்டாம் வாரத்தில் உளுந்து, பாசி, கம்பு என ஒன்றன் பின் ஒன்றாக விதைப்பு செய்யப்பட்டது. உள்நாட்டு தேவைக்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் அதிக அளவில் இறக்குமதி செய்வதை தவிர்க்கும் வகையில் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கொள்ளுப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய மத்திய, மாநில அரசுகள் உளுந்து, பாசி, துவரை பயிரிடும் விவசாயிகளுக்கு மருந்து, விதைகளை வேளாண் விரிவாக்க மையங்களில் பாதி விலையில் வழங்குகிறது.

தனியார் விதைக்கடைகளில் விலைக்கு வாங்கும் விதைகள் காய்பிடிப்பு சமயத்தில் மஞ்சள் தேமல், பூஞ்சானம் நோய் தாக்குதல் ஏற்பட்டு உரிய விளைச்சலை கொடுப்பதில்லை. இதனால் இந்தாண்டு வேளாண் விரிவாக்க மையங்களில் மானியத்தில் கொடுக்கப்பட்ட வம்பன் 11 ரக விதைகளை பெரும்பாலான விவசாயிகள் வாங்கி விவசாயம் செய்தனர். அவ்விதைகள் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர்ந்தது. கடந்த மாதம் 17ம் தேதி பெய்த மழையில் காய் பிடித்து திரட்சியாகும் சமயத்தில் கடும் சேதம் ஏற்பட்டது.

இதனை ஆய்வு செய்த அதிகாரிகளும் பாதிப்பை உறுதிப்படுத்தினர். வழக்கமாக ஏக்கருக்கு ஐந்து குவிண்டால் முதல் எட்டு குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போதைய மழையினால் மகசூல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் சம்பிரதாயத்துக்காக உளுந்து, பாசியை அறுவடை செய்துள்ளனர். அவை மக்கிப்போயுள்ளதால் குவிண்டால் ரூபாய் நாலாயிரம் முதல் ஆறாயிரம் வரை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் கேட்கின்றனர்.

இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஏக்கருக்கு உழவு செய்ய, விதைக்க, உரமிட, களை பறிக்க, நோயில் இருந்து பாதுகாக்க மருந்து என அத்தனைக்கும் ரூபாய் இருபதாயிரம் வரை செலவாகிவிட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்ட ஒன்றிய, மாநில அதிகாரிகள், காப்பீட்டு அதிகாரிகள் நடப்பாண்டு 2023 பயிர் காப்பீடு இழப்பீடு ஓரிரு மாதங்களில் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர். அதிகாரிகள் தெரிவித்தபடி விவசாயிகள் நலன் கருதி விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்