Saturday, September 28, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Nithya

ஏகாதசி 28.9.2024 – சனி

மஹாளய காலத்திற்கு முன் வரும் ஏகாதசி என்ற பெருமை இந்த ஏகாதசிக்கு உண்டு. அஜா ஏகாதசி என்று பெயர். அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மகாபாரதத்தில் தர்மருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவமான பலன்களை அருளவல்லது. அந்த வகையில் புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி நம் தீவினைகளை நீக்கி அருளக்கூடியது. இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, பகவான் விஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசியை சாற்றி வழிபடலாம். அன்று பகவான் ஸ்ரீஹரி நினைவாகவே இருப்பதன் மூலமும் ‘‘அஸ்வமேத யாகம்’’ செய்த புண்ணியம் பெறுகிறார்கள். அன்று முழுவதும் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. உடல்நலம் சரியில்லாதவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி சேவை28.9.2024 – சனி

ஸ்ரீ ஆண்டாளும் பெரியாழ்வாரும் அவதரித்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். 108 திருத்தலங்களில் ஒன்று. இந்தத் தலத்தில் ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந் நிலையில் ஏகாதசி இரவு ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த தினம் இன்று. அருகில் உள்ள திருவண்ணமலையில் ஸ்ரீனிவாசப்பெருமாள் புரட்டாசி சனி என்பதால் விசேஷ அலங்காரத்தோடு கருட வாகன உலா வருவார்.

போதேந்திராள் ஆராதனை 29.9.2024 – ஞாயிறு

காஞ்சி சங்கர மடத்தின் 59-வது பீடாதிபதியாகத் திகழ்ந்து, நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை நாடெங்கும் பரப்பிய மகான் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை வைபவம், இவர் வாழ்க்கை அற்புதமானது. 1610-ம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கேசவ பாண்டுரங்கன் என்பவருக்கும் சுகுணா அம்மையாருக்கும் மகனாக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர், புருஷோத்தமன். சிறுவயது முதலே இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவராகத் திகழ்ந்த புருஷோத்தமன், ஒரு முறை தன் தந்தையோடு காஞ்சி மடத்துக்குச் சென்றார். சிறுவனின் முகத்தில் ஜொலித்த பிரகாசத்தைக் கண்ட பீடாதிபதி விஸ்வாதிகேந்திரர் என்னும் ஆத்ம போதேந்திரர், புருஷோத்தமனை மடத்திலே வளர்க்க விரும்பினார். சிறுவன் புருஷோத்தமனுக்கு சகலவிதமான கல்வியும் மடத்தில் போதிக்கப்பட்டது. புருஷோத்தமனும் ஆர்வத்தோடு அனைத்தையும் கற்றுவந்தான். ஒருமுறை, விஸ்வாதிகேந்திரர் காசிக்குப் போனார்.

அங்கே பாகவதர்கள் கூடி, நாமசங்கீர்த்தனம் செய்வதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். தென்னாட்டிலும் இதைச் செய்து பக்தி வளர்க்க விரும்பினார். அப்போது குருவைக் காண காசிக்கு வந்த புருஷோத் தமனிடம், தன் யோசனையை வெளிப்படுத்தினார். குருவின் ஆணைப்படி நாமசங்கீர்த்தனத்தில் மகிமையைப் பரப்பும் கைங்கரியத்தை தன் வாழ்வாகக் கொண்டார். காசியிலிருந்து திரும்பியதும், புருஷோத்தமனுக்கு ‘போதேந்திராள்’ என்ற திருநாமமிட்டு, காஞ்சி மடத்தின் பீடாதி பதியாக்கினார் விஸ்வாதிகேந்திரர். அதன்பின் தன் வாழ்நாள் முழுதும் போதேந்திராள் நாம ஜபமகிமையையும், நாமசங்கீர்த்தன மகிமையையும் நாடெங்கும் பிரபல்யமாக்கினார்.

சுவாமிகள் முக்தியடைந்த நாள் 1692 ம் ஆண்டு, புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி. இன்றும் கோவிந்தபுரத்தில் அமைந்திருக்கும் போதேந்திராள் சந்நதியில், பௌர்ணமி தொடங்கி மகாளய அமாவாசை வரை சுவாமிகளின் ஆராதனை வைபவம் நாமசங்கீர்த்தனத்தோடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சன்யஸ்த மகாளயம் 29.9.2024 – ஞாயிறு

மகாளய பட்சத்தில் வரும் துவாதசி திதியில் குடும்பத்தில் திருமணம் ஆகாத சன்னியாசியாக இறந்துபோனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினம். அதையே ஸன்யஸ்த மகாளயம் என்று குறிப்பிடுகின்றனர்.

அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை 30.9.2024 – திங்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகே திருத்துறையூர் எனும் ஊரில், ஆதிசைவ மரபில் அவதாரம் செய்தவர் அருணந்தி. மெய்கண்டாரின் சீடராகத் திகழ்ந்த இவர் சகல ஆகமங்களிலும் வல்லவராய்த் திகழ்ந்தமையால் “சகலாகமப் பண்டிதர்” எனும் சிறப்புப் பெயர் பெற்றார். சந்தானக் குரவர்களுள் முதல்வரான மெய்கண்டார், தம்மை அடைந்த மாணவர்களுக்கு உபதேசம் செய்து வந்தார். இதனை அறிந்த அருணந்தி, வயதில் சிறிய மெய்கண்டார் தம்மைக் காண வரவில்லை என்று கோபம்கொண்டு மெய்கண்டாரை அழைத்து வரச் சொல்லி தம் சீடர்களை அனுப்பினார். சென்ற சீடர்கள் மெய்கண்டாரின் சாத்திர உபதேசத்தில் ஈடுபட்டு அவரடிக்கு ஆளாகினர். கோபம்கொண்ட சகலாகமர், மெய்கண்டார் உபதேசம் செய்யும் இடத்திற்குத் தாமே சென்றார்.

அப்போது மெய்கண்டார் மாணவர்களுக்கு ஆணவம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். சகலாகமர் மெய்கண்டாரிடம், “ஆணவத்தில் உருவம் யாது?” என்றார். அதற்கு மெய்கண்டார் தமது திருவிரலால் அவரைச் சுட்டிக் காட்டி இப்படித்தான் இருக்கும் என்றார். குருவின் அருள் திறத்தை எண்ணி அவரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார் சகலாகமர். மெய்கண்டார் அவருக்குத் திருவடி தீட்சை செய்து மெய்யுணர்வு அருளி “அருணந்தி” என்ற பெயரையும் சூட்டியருளினார். அருணந்தி சிவாச்சாரியார் அருளிய நூல்கள் இரண்டு. அவற்றுள் தமிழ் ஆகமம் எனப்படும் சிவஞானசித்தியார் 629 விருத்தங்களைக் கொண்டது. அவர் குரு பூஜை இன்று.

கஜச்சாயை 30.9.2024 – திங்கள்

விபத்து மூலமாகவோ கொலை செய்யப்பட்டோ தற்கொலை செய்து கொண்டோ இறந்தவர்களுக்காக மகாளயபட்ச கஜச்சாயையில் தர்ப்பணம் கொடுப்பதாலும் தானங்கள் செய்வதாலும் அவர்களின் ஆத்மா அமைதி பெறும். நம்மை பரிபூரணமாக ஆசீர்வதிக்கும் அந்த தினம் இன்று.

மகாளய அமாவாசை 2.10.2024 – புதன்

தென்புலத்தார் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு ஒருபோதும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரம். இஷ்ட தெய்வ வழிபாட்டை விட, குலதெய்வ வழிபாட்டை விட, முன்னோர்களை வணங்குவதே மிகமிக முக்கியமான வழிபாடு. வீட்டில் ஏதேனும் சுபநிகழ்ச்சிகள் நடக்கிறதென்றால், முன்னதாக முன்னோருக்கு படையலிட்டு வழிபட்ட பிறகே தொடங்கவேண்டும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதை பித்ருக்கடன் என்றே விளக்குகிறது தர்ம சாஸ்திரம். கடன் என்றால் கடமை. ஒருவருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, கிரகண காலம், சிராத்தம் முதலான நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விட்டு, வழிபட வேண்டும். குறைந்தபட்சம் அமாவாசை தோறும் அவசியம் வழிபாடு நடத்த வேண்டும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை மிக முக்கியம். இதில் புரட்டாசி அமாவாசை மகாளயபட்ச அமாவாசை என்று போற்றப்படுகிறது.

எதை மறந்தாலும் மகாளயபட்ச அமாவாசையை மறக்கக் கூடாது. மகாளயபட்ச காலமான பதினைந்து நாட்களும் பித்ருலோகத்தில் இருந்து முன்னோர்கள், பூலோகத்துக்கு வருகிறார்கள். அவர்களை நினைத்து செய்கிற தர்ப்பணங்களையும் படையலிடும் உணவையும் ஏற்றுக்கொண்டு மகிழ்கிறார்கள். ஆசீர்வதிக்கிறார்கள். எனவே, மகாளயபட்ச பதினைந்து நாட்களும் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோர்களை வழிபடவேண்டும். காகத்துக்கு உணவிட வேண்டும். முன்னோர்களை நினைத்து தானங்கள் செய்யவேண்டும். எது மறந்தாலும் அமாவாசையை மறக்கக்கூடாது.

நவராத்திரி ஆரம்பம் 3.10.2024 – வியாழன்

இன்று முதல் சகல கோயில்களிலும் நவராத்திரி ஆரம்பம். வீடுகளிலும் கொலு வைப்பார்கள். நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்றுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். நவராத்திரி வழிபாடு செய்பவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள். நவராத்திரி உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையைப் பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது. ஒவ்வொரு வருடமும் நான்கு வித நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அதில் நாம் புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி கொண்டாடுகிறோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துக்கத்தைப் போக்கும் துர்க்கை யையும், இரண்டாவது மூன்று நாட்கள் செல்வத்தைப் பொழியும் லட்சுமியையும், மூன்றாவது மூன்று நாட்கள் ஞானத்தை நல்கும் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம்.

குலசேகரப்பட்டினம் தசரா 3.10.2024 – வியாழன்

முத்தாரம்மன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் குலசேகரப்பட்டினத்தின் கடற் கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தித் தலமாகும். திருச்செந்தூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. மூலவராக அம்மையும், அப்பனும் ஒருசேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தை இங்கு காணலாம். சுயம்பு என்பது தானே தோன்றியது, உளி கொண்டு செதுக்காதது. இங்கு சிவன் சுயம்புவாக உள்ளார். மூலவர் முத்தாரம்மன், ஞானமூர்த்தி என்பவர்களாவர். இக்கோயிலின் தல மரம் வேப்பிலை மரமாகும். மதுரையை மீனாட்சி ஆள்வதைப்போல இங்கு அம்பாளின் ஆட்சி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் இருவரும் வடக்கு நோக்கி உள்ளனர். அம்மை நோயினை முத்து போட்டதாகக் கூறுவர். முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர்கட்டச்செய்வர். அவ்வாறு செய்யும்போது முத்து நோய் இறங்கும். முத்துக்களை ஆற்றி குணப் படுத்தியதால் முத்து+ஆற்று+அம்மன் முத்தா(ற்ற)ரம்மன் என்றழைக்கப்படுகிறார்.

தசரா விழா இங்கு விசேஷம். முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவன், அகத்திய மாமுனிவரை அவமரியாதை செய்தான். கோபமுற்ற அவர் வரமுனிக்கு எருமைத்தலையும் மனித உடலும் பெற்று அலையும்படி சாபமிட்டார். சாப விமோசனமாக இறைவியின் கையால் அவனது உடல் அழிந்து சாப விமோசனம் கிடைக்கும் என்றார். வரமுனி, மகிசாசூரனாக மூன்று உலகத்திலும் வலம் வந்தான். தேவர்களும் முனிவர்களும் சிவனிடம் சென்று முறையிட, பார்வதியை நோக்கித் தவம் செய்தால், தீர்வு கிடைக்கும் என்று சிவன் கூறினார். தேவர்களும் தவம்புரிந்தனர். முனிவர்கள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராதபடி அன்னை மாய அரணை உருவாக்கினார். வேள்வியில் பிறந்த பெண் குழந்தை லலிதாம்பிகை என்று அழைக்கப்பட்டது. ஒன்பது நாட்களில் இந்த குழந்தை முழுமையான வளர்ச்சியடைந்து 10 நாள் பராசக்தி லலிதாம்பிகை என்ற பெயரில் மகிஷாசூரனை வதம் செய்யப் புறப்பட்டாள். மகிஷா சூரனை அழித்த 10-ஆம் நாள் தசரா பெரும் திருவிழாவாக இங்கு கொண்டாடப் படுகிறது. அன்னை பராசக்தி வேள்வியில் வளர்ந்த 9 நாட்களும் நவராத்திரி திருவிழாவாகும். மகிஷாசூரமர்த்தினி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள். இன்று இங்கே தசரா ஆரம்பம்.

28.9.2024 சனிக்கிழமை புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை.
30.9.2024 திங்கட்கிழமை மாத சிவராத்திரி.
30.9.2024 திங்கட்கிழமை பிரதோஷம்.
1.10.2024 செவ்வாய்க்கிழமை விஷசஸ்திர பிதூர் மகாலயம்.
3.10.2024 வியாழக்கிழமை குலசை முத்தாலம்மன் சிம்ம வாகனம்.
3.10.2024 வியாழக்கிழமை மதுரை மீனாட்சி கொலு தர்பார்.
4.10.2024 வெள்ளிக்கிழமை திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

You may also like

Leave a Comment

six − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi